)
Idli Kadai Movie Review in Tamil: டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷ் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜி.கே பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை மேற்கொண்டுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

தேனி அருகில் ஒரு கிராமத்தில் ராஜ்கிரனுக்கு மகனாக பிறக்கிறார் தனுஷ். ராஜ்கிரண் அந்த ஊரிலேயே ஒரு இட்லி கடை நடத்தி வருகிறார். அவரது இட்லி அந்த பகுதி முழுவதும் பிரபலம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. தனக்கு அடுத்து தனது மகன் தனுஷ் இந்த கடையை எடுத்து நடத்த வேண்டும் என்று ராஜ்கிரன் ஆசைப்படுகிறார். ஆனால் தனுஷ் அதை விட்டுவிட்டு பாங்காங்கில் மிகப்பெரிய தொழிலதிபர் சத்யராஜின் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவிற்கும் தனுஷிற்கும் திருமணம் நடைபெற இருக்கும் சில நாட்களுக்கு முன்பு ராஜ்கிரண் இறந்து விடுவதற்காக தகவல் வருகிறது. அதன் பின்பு தனுஷ் மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதே இட்லிக்கடை படத்தின் கதை.
தனுஷ் இந்த இட்லி கடை படத்தை எழுதி இயக்கியுள்ளார். தன் சிறுவயதில் பார்த்த சில விஷயங்களை வைத்து ஒரு கற்பனையாக இந்த படத்தை இயக்கியுள்ளதாக முன்பு தெரிவித்து இருந்தார். பா பாண்டி, ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை தொடர்ந்து இட்லி கடை படத்திலும் ஒரு இயக்குனராக வெற்றி பெற்றுள்ளார் தனுஷ். அவரது முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது, அதுவே இந்த படத்தின் வெற்றிக்கும் காரணமாக உள்ளது. நடிகர் தனுஷ் வழக்கம் போல தனது வேலைகளை கச்சிதமாக செய்துள்ளார். சண்டை காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு தேசிய விருது வென்ற நடிகர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் தனுஷ். மறுபுறம் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் அசத்தியுள்ளார். ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு உள்ள அதே தோரணையிலும் ஒரு திமிரான கதாபாத்திரத்திலும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். அவரின் கதாபாத்திரம் தான் இந்த படத்தை தாங்கி பிடிக்க உதவுகிறது. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நித்யா மேனன் மற்றும் சத்யராஜ் அசத்தியுள்ளனர், அவர்களின் அனுபவம் இட்லி கடை படத்திற்கு அதிகம் உதவுகிறது. இவர்களை தவிர ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, ஷாலினி பாண்டே ஆகியோர் அந்தந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.
ஜிவி பிரகாஷின் இசையில் முதல் பாதி முழுக்கவும் பின்னணி இசை நன்றாக இருந்தது, இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. ஒரு கிராமத்து படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை கிரண் கவுசிக் கொடுத்துள்ளார். சொந்த ஊரை மறந்து வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் இட்லி கடை படம் கனெக்ட் ஆகும். என்னதான் வெளியூருக்கு சென்றாலும் தங்களது சொந்த ஊரையும் மறக்கக்கூடாது என்பதை தனுசு இந்த படத்தின் மூலம் நினைவுபடுத்துகிறார். முதல் பாதி தொடங்கியதில் இருந்து இடைவெளி வரை நிதானமாகவும், அதே சமயம் சுவாரசியமாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் படம் சற்று தொய்வடைகிறது.
இரண்டாம் பாதியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரசியத்தை ஏற்படுத்தாதது படத்தின் மைனஸ். இவ்வளவு பெரிய பொருள் செலவில் உருவாக்கிய படத்தில் VFX காட்சிகளை இன்னும் சற்று நன்றாக அமைத்திருக்கலாம். நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் இடையிடையில் வரும் VFX காட்சிகள் உறுத்தலாகவே உள்ளது. இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் காட்சிகளை சற்று கூடுதலாக வைத்து விட்டார்களோ என்ற உணர்வு ஏற்படுகிறது. மொத்தத்தில் இந்த இட்லி கடை நன்றாக வெந்துள்ளது மற்றும் சுவையாகவும் உள்ளது. பரோட்டா ரசிகர்களுக்கும் படம் பிடிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ