)
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என பரவலாக பாராட்டப்படுகிறது. நடிகர் விக்ரமின் மகன் என்பதை தாண்டி ஒரு நடிகராக இந்த படத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

துருவ் விக்ரம் இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், பைசன் திரைப்படத்தைத் தான் தனது உண்மையான முதல் படமாக கருதுவதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். "என் பழைய படங்களை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த படத்தைப் பாருங்கள். இதுதான் என் முதல் படம்" என்று அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது. படத்தை பார்க்கும்போது, அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பது தெளிவாகிறது. இந்த படத்திற்காக அவர் தனது 200% உழைப்பை கொடுத்துள்ளார் என்பதும், மாரி செல்வராஜின் கிட்டா என்ற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார் என்பதும் நிரூபணமாகிறது.
பைசன் திரைப்படம் 1990களில் தென் தமிழகத்தில் நிலவும் சாதிய மோதல்களுக்கு மத்தியில், ஒரு கபடி வீரரின் போராட்டமான வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது. கபடி மீது தீராத காதல் கொண்ட துருவ் விக்ரம், உள்ளூர் அணியில் விளையாட முயற்சிக்கும்போது சாதி ஒரு தடையாக நிற்கிறது. இந்த தடைகளை தாண்டி, இந்திய அணிக்கு தேர்வாக போராடும் ஒரு இளைஞனின் கதையில் துருவ் விக்ரம் கச்சிதமாக பொறுத்தியுள்ளார். இந்த ஒரு கதாபாத்திரத்திற்காக துருவ் விக்ரம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கும் மேலாக கபடி பயிற்சி எடுத்து, ஒரு உண்மையான விளையாட்டு வீரராகவே திரையில் தோன்றுகிறார். கோபம், சோகம், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கபடி ஆடும் காட்சிகளுக்காக அவர் உடல் ரீதியாக கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெளிவாக தெரிகிறது. அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சிட்டியில் வளர்ந்த துருவ் விக்ரம் ஒரு கிராமத்து கதையில் எப்படி பொருந்துவார் என்றும் பலரும் படம் வெளியாவதற்கு முன்பு கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு தனது நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆதித்யா வர்மா, மகான் போன்ற படங்களில் காணப்படாத ஒரு முழுமையான நடிப்பு திறமையை பைசன் வெளிக்கொண்டு வந்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். மூன்றாவது படத்திலேயே இத்தகைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி, எந்தவொரு சவாலான கதாபாத்திரத்தையும் தன்னால் ஏற்க முடியும் என்ற நம்பிக்கையை துருவ் விதைத்துள்ளார். குறிப்பாக படத்தில் சேரில் சண்டையிடும் காட்சிகள், கிளைமாக்ஸ் கபடி காட்சிகள், பஸ்ஸில் நடக்கும் சண்டை, மழையில் நனைந்தபடி தனது அப்பாவிடம் பேசும் காட்சி என படம் முழுக்க அசத்தி உள்ளார். நிச்சயம் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய நடிகராக வருவார் என்பதை பைசன் படம் உணர்த்தி உள்ளது.
படத்தை பார்த்த துருவ் விக்ரமின் தந்தை, நடிகர் விக்ரம், மிகுந்த நெகிழ்ச்சி அடைந்ததாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் இயக்குநர் மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்து, "நான் எதிர்பார்த்ததை விட படம் அசத்தலாக வந்துள்ளது. எனக்கு 'சேது' படம் எப்படி ஒரு மைல்கல்லாக அமைந்ததோ, அதுபோல 'பைசன்' துருவ்விற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்" என்று விக்ரம் கூறியதாக தெரிவித்துள்ளார். தன் மகனை ஒரு சிறந்த நடிகராக காண வேண்டும் என்ற விக்ரமின் கனவிற்கு "பைசன்" மனநிறைவை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ