)
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவியது என்றாலும், இது முற்றிலும் ஒரு சுயசரிதை படம் அல்ல என்றும், தனது அரசியல் பார்வையை ஒரு புனைவு கதையாக உருவாக்கியுள்ளதாகவும் மாரி செல்வராஜ் தெளிவுபடுத்தியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம், 'பரியேறும் பெருமாள்' வெற்றி பெற்ற உடனேயே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதை இயக்குவதற்கு மனதளவிலும், உடலளவிலும் ஒருவித முதிர்ச்சியும், தயாரிப்பும் தேவைப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் யு/ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ், ‘பைசன்’ படத்தின் நோக்கத்தையும், அது உருவான விதத்தையும் விளக்கினார். அவர் கூறியதாவது, “பரியேறும் பெருமாள் வெற்றிக்கு பிறகு இந்த படத்திற்கு ஒப்பந்தமானேன். ஆனால், இதை எடுப்பதற்கு எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஒரு தயாரிப்பு தேவைப்பட்டது. துருவையும் தயார் செய்ய நேரம் தேவைப்பட்டது. இந்த படத்தில் எனக்கு சவாலாக இருந்தது விளையாட்டு மட்டுமல்ல, அதை உளவியல் ரீதியாக அணுக ஒரு முதிர்ச்சி தேவைப்பட்டது” என்றார்.
மணத்தி கணேசன் தனது உறவினர் என்றும், தனது பால்ய கால ஹீரோ என்றும் குறிப்பிட்ட மாரி செல்வராஜ், அவரது வாழ்க்கையை அப்படியே படமாக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். “மணத்தி கணேசன் என் அண்ணன் முறை வேண்டும். சின்ன வயதிலிருந்தே அவர் விளையாடுவதை முன் வரிசையில் அமர்ந்து பார்ப்பேன். ஆனால், அவரது கதையை படமாக்க வேண்டும் என்று அப்போது தோன்றவில்லை. எனது வாசிப்பு மற்றும் அறிவை மையமாக வைத்து, தென் தமிழகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அதை எந்த தளத்தில் சொல்வது என்று தெரியவில்லை.

அப்போது தற்செயலாக கணேசன் அண்ணனை சந்தித்தபோது, அவரது வெற்றியும் வாழ்க்கையும் நினைவுக்கு வந்தது. அவரிடம், 'உங்கள் பயணத்தை ஒரு கருவாக வைத்து, நான் யோசித்த கதையை சொல்ல ஆசைப்படுகிறேன்' என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். எனவே, அவரது பயணத்தை மையமாக வைத்து, எனது புனைவையும் இணைத்து ஒரு புனைவு கதையாக இதை உருவாக்கியுள்ளேன்,” என்று விளக்கினார். இதன் மூலம், ‘பைசன்’ திரைப்படம் வெறும் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று படமாக இல்லாமல், விளையாட்டு, அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளைப் பேசும் ஒரு ஆழமான படைப்பாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை கடந்து படத்தை கொண்டு செல்ல ஏதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் 'காளமாடன்' என்று தான் உள்ளது என்று இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்க மளித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ