)
1990 காலகட்டங்களில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து, பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சித்தாரா. மம்மூட்டி, மோகன்லால், ரஜினிகாந்த் என சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், தனது இயல்பான அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆனால், திரை வாழ்வில் உச்சத்தில் இருந்த சித்தாரா, தனது 59வது வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னணியில் ஒரு சோகமான கதை உள்ளது.

சித்தாராவின் கலைப்பயணம் 1986ம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த அந்த படம், அவருக்கு ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது. முதல் படமே வெற்றி பெற்றதால், மலையாளத்தில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் இயக்குநர் கே. பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம் மூலம் சித்தாரா அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெற்ற கேளடி கண்மணி என்ற ஒரே பாடல், அவரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது. அதை தொடர்ந்து, உன்னைச் சொல்லி குற்றமில்லை, புரியாத புதிர், பொண்டாட்டியே தெய்வம் என பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
சித்தாரா ஒரு காலத்தில் திருமண கனவுகளுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது அவரது தந்தையின் திடீர் மரணம். தந்தையின் மறைவுக்கு பிறகு, குடும்பத்தின் முழு பொறுப்பும் சித்தாராவின் தோள்களில் விழுந்தது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, தம்பியை படிக்க வைத்து, ஒரு மருத்துவராக்கினார். இந்த குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில், அவரால் திருமணம் குறித்து யோசிக்க முடியவில்லை.
குடும்ப பொறுப்புகள் ஒருபுறம் இருந்தாலும், சித்தாராவின் வாழ்வில் ஒரு காதல் இருந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. மனதிற்கு நெருக்கமான அந்த காதல் கைகூடாததால் ஏற்பட்ட வலியின் காரணமாக, அவர் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய விரும்பவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
காலப்போக்கில், பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், படையப்பா போன்ற படங்களில் துணை நடிகையாகவும், பின்னர் சின்னத்திரையிலும் தனது பயணத்தை தொடர்ந்தார். கங்கா யமுனா சரஸ்வதி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, பல தொடர்களில் நடித்துள்ளார். என்றென்றும் கவர்ச்சிக்கு 'நோ' சொல்லி, தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சித்தாரா, இன்றும் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும், கலையுலகில் தனக்கென ஒரு மரியாதையான இடத்தை பிடித்துள்ள சித்தாராவின் வாழ்க்கை, பலருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ