டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க, ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார்.
மேலும் படிங்க: நடிகை சௌந்தர்யா போல மர்மமான முறையில் உயிரிழந்த நடிகைகள்!
படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி, இயக்குநர் கே . பாக்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி , இயக்குநர்கள் ராகவ் மிர்தாத், வெற்றி, நடிகர் லிங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ''இந்த திரைப்படம் நிறைய கலைஞர்களுக்கு முதல் படம். அவர்களுக்கு இந்த மேடை முக்கியமானது. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இயக்குநர் தம்பிதுரைக்கு சினிமா மீது இருக்கும் தீவிரமான காதலால் அவர் வேலைக்கு சென்று கொண்டே இப்படத்தின் அனைத்து பணிகளையும் செய்தார். அவருக்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் . அவர் தன்னுடைய சக்திக்கு மீறி உழைப்பை கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் இளமாறனுக்கு நன்றி. கடந்த 20 நாட்களாக இப்படத்தினை மக்களிடம் சேர்ப்பதற்காக தொடர்ந்து விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களை தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம் . இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ''இது எனக்கு வித்தியாசமான மேடை. இயக்குநர் தம்பிதுரை ஒரே சமயத்தில் இரண்டு வேலை அல்ல, பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறார். 24 மணி நேரமும் சினிமாவுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உளவியல் ரீதியாகவும் அவர் தயாராகி இருக்க வேண்டும். இல்லை எனில் இது சாத்தியமாகி இருக்காது. இது ட்ராமாடிக்காக யாருக்கு இருந்திருக்கும் என்றால், இயக்குநர் தம்பி துரைக்கு தான் ட்ராமாடிக்காக இருந்திருக்கும். இந்தப் படத்தை எடுப்பதில் அவருக்கு ட்ராமா இருந்திருக்கும். நான் வழக்கறிஞர் என்ற முறையில் தினந்தோறும் ட்ராமாக்களை எதிர்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள்.
அரசியல்வாதி என்ற முறையில் நிறைய மக்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அவர்களுடைய ட்ராமாவை தீர்த்து வைப்பதற்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன். அதனால் ட்ராமா என்பது நான் தினந்தோறும் சந்திக்கும் விஷயம்தான். நான் மட்டுமல்ல இங்கு இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ட்ராமாவை எதிர்கொள்கிறீர்கள். அது உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. ட்ராமாவில் இருந்து விடுதலையானால் சந்தோஷம் தான். நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தை தான் இந்தப் படம் பேசுகிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நிச்சயமாக நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். ஒரு பாடல் கூட சோடை போகாது. இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை பாடலாசிரியர் மகேஷ் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார், அவர் என் உறவினர் தான். தற்போது இல்லை, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் என விரும்பி இருந்தார். இந்தப் படத்தின் தொடக்க கட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதிய இரண்டு பாடல்களும் ஹிட் ஆகும் என்பது என் நம்பிக்கை. பாடல்கள் மட்டுமல்ல படமும் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்,'' என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், ''எனக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்பந்தமில்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் இயக்குநர் தம்பிதுரை. அவர் இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தாருங்கள் என அழைப்பு விடுத்தார். நான் இங்கு வருகை தராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல விஷயத்தை தவறவிட்டிருப்பேன். நம் மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது, படத்தை திரையரங்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் மூலமாக படத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நான் ஒன்றைத் தான் சொல்ல விரும்புகிறேன். இது தமிழர்களின் படம். தமிழர்களாகிய நீங்கள் தான் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம் ஆர் ராதாவை பற்றி பல விஷயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசுகிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இயக்குநரை பற்றி மற்றவர்கள் அனைவரும் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட 'வெளி' வேலைகள் இருக்கின்றன. இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது. இங்கு படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு" என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''ட்ராமா படத்தை வெளியிடும் இளமாறனுக்கு என் மனமார்ந்த வா்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாமல் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை நம்பி வெளியிடும் இளமாறனுக்கு என் நன்றி. இந்த குழுவில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது. இந்த குழுவை எனது மாணவன் பாடலாசிரியர் அருண் பாரதி தான் அறிமுகப்படுத்தி வைத்தார். எதிர்காலத்தில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் குழுவினரை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் டிரைலரையும் , பாடல்களையும் பார்க்கும் போது இந்த குழுவினர் நிச்சயம் பிரகாசமாக வருவார்கள் என்ற நம்பிக்கை என் மனதுள் ஏற்பட்டது. படம் நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.
மேலும் படிக்க | வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









