)
மலையாள திரை உலகில் நிஜத்திற்கு நெருக்கமான கதைகளே அதிகம் எடுக்கப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு சூப்பர் ஹீரோ படமான மின்னல் முரளி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் மலையாள திரை உலகில் இருந்து மற்றொரு சூப்பர் ஹீரோ படமான லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்டுள்ளது. டொமினிக் அருண் இந்த படத்தை எழுதி இயக்க, சாந்தி பாலச்சந்திரன் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவும், சாமன் சக்கோ எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மிகப்பெரிய சண்டைக்கு நடுவில் இருந்து தப்பிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு நகரத்தில் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அவருடைய எதிர் வீட்டில் வசிக்கும் நஸ்லெனுக்கு கல்யாணியை பார்த்தவுடன் பிடித்து விட அவருடன் பேசி நண்பர் ஆகிறார். மறுபுறம் அந்த நகரத்தில் பொதுமக்களை கடத்தி அவர்களின் உடல் பாகங்களை ஒரு கும்பல் திருடி விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் கல்யாணி பிரியதர்ஷனை கடத்த முயற்சிக்கும் போது அவர் சாதாரண மனிதர் இல்லை என்பதும், அபூர்வ சக்தி கொண்டவர் என்பதும் தெரிய வருகிறது. அதன் பின்பு என்ன ஆனது? உண்மையில் கல்யாணி பிரியதர்ஷன் யார்? அவரின் பின்னணி என்ன? என்பதே லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா படத்தின் கதை.
ஹாலிவுட் எத்தனை சூப்பர் ஹீரோ படங்கள் வந்தாலும் இந்திய சினிமாவில் அதற்கு ஈடாக ஒரு சில படங்கள் மட்டுமே வந்துள்ளது. அந்த வரிசையில் இந்த லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா படமும் இணைந்துள்ளது. வெறுமனே சூப்பர் ஹீரோ படம் என்று இல்லாமல் அதற்கான சரியான கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் டொமினிக் அருண். கதையை சொல்ல முதல் பாதி முழுவதும் எடுத்துக் கொண்டாலும் இரண்டாம் பாதியில் படம் அசுர வேகத்தில் செல்கிறது. படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மொத்த படமும் ஒரு நாவலை பார்க்கும் உணர்வில் இருந்தது.
சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அசத்தியுள்ளார். இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து உள்ளார். சண்டை காட்சிகளில் பிரமாதமாக அசத்தியுள்ளார். எதிர் வீட்டு பையனாக நஸ்லென் வழக்கம் போல நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். கல்யாணியிடம் பேச முயற்சிக்கவும் காட்சிகளும், அவர் வீட்டிற்குள் மாட்டிக் கொண்டு தப்பிக்க முயலும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. அவர்களது நண்பர்களாக நடித்திருக்கும் இருவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் சாண்டி வித்தியாசமான அதே சமயம் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். இரண்டாம் பாதியில் மருத்துவமனையில் நடக்கும் காட்சிகளில் கைத்தட்டல்களை பெறுகிறார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. அதேபோல கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிதாக குறை சொல்லும் படி இல்லாமல் நன்றாக இருந்தது. வெறுமனே சூப்பர் ஹீரோ கான்செப்ட்டை மட்டும் வைத்து கதையை கொண்டு செல்லாமல் இருந்ததற்கு இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். லாஜிக்காக நிறைய கேள்விகள் படத்தில் இருந்தாலும் அவை அனைத்தையும் விறுவிறுப்பான திரை கதையின் மூலம் மறக்கடிக்க செய்கின்றனர். இரண்டாம் பாகத்திற்கு கொடுக்கப்பட்ட லீடும் சிறப்பாக இருந்தது. நிறைய கதாபாத்திரங்களை பற்றிய முழுமையான தகவல்கள் லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா படத்தில் இடம்பெறவில்லை. அடுத்தடுத்த பாகங்களில் அதற்கு விடைகளை எதிர்பார்க்கலாம். ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ