)
Karuppu Team Regrets Mocking Ilaiyaraaja : கடந்த 15ஆம் தேதி வெளியான திரைப்படம், கருப்பு. இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்ததோடு படத்தை எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து காெள்வோம்.
சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் முன்னர் ஹிட் அடித்திருந்த நிலையில், படமும் வெளியான பிறகு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தில் ஓரிரு இடங்களில் இசை சரியாக கேட்கவில்லை என்பது ரசிகர்களின் விமர்சனமாக இருந்தது. இதையடுத்து, இத்திரைப்படத்தின் இசை ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது இந்த படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இசையுலகின் ராஜாவாகவும், 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாகவும் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. இவர், மஞ்சுமெல் பாய்ஸ், குட் பேட் அக்லி, கூலி உள்ளிட்ட பல படங்களில் தன் பாடல்கள் அனுமதி கேட்காமல் உபயோகிக்கப்பட்ட போது, தனது காப்புரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை வைத்து ‘கருப்பு’ படத்தில் கேலி செய்ய பட்டிருந்தது.
1985ல் வெளியான அலை ஓசை என்கிற படத்தில் வெளியான பாடல் இது. இதனை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடல், பரியேறும் பெருமாள் படத்தில் போராட்டத்திற்கான பாடலாக உபயோகிக்கப்பட்டிருக்கும். அப்போதிருந்து இந்த பாடல், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த பாடலாகும்.
‘கருப்பு’ படத்தில், ஏழுகிணறு எனும் நீதிமன்றத்தை சேர்ந்த அனைவரும் தங்களது கட்டடம் இடிந்து விழுந்ததால், இதனை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்துவர். படத்தில், இந்த போராட்டம் நடத்தும் போது அவர்கள் “போராடடா” எனும் பாட்டை உபயோகித்திருப்பர். கடைசியில், “தன் பாடலை உபயோகித்ததற்காக வழக்கறிஞர்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்” என செய்திகள் வெளியில் வரும்.
கருப்பு படத்தில், இது போல தனது உரிமைக்காக போராடும் இளையராஜாவை, ஒரு நகைச்சுவை எலிமெண்டாக சித்தரித்தது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், அனைவரும் கருப்பு படக்குழுவிற்கும், குறிப்பாக ஆர்.ஜே.பாலாஜிக்கும் கண்டனங்களை தெரிவித்தனர். இளையராஜாவின் சட்டப்போராட்டத்தை இப்படி கேலி செய்து எப்படி எடுக்க முடியும் என்பது கண்டனம் தெரிவித்தவர்களின் குரலாக இருந்தது. இதையடுத்து, படக்குழு இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
கருப்பு திரைப்படத்தை தயாரித்த ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம், சமீபத்தில் எழுந்துள்ள இந்த பிரச்சனை குறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், “மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
#Pressrelease #PublicAnnouncement #Karuppu #MaestroIlayaraaja pic.twitter.com/hdgP3wZhBL
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 19, 2026
50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| படம் | கருப்பு |
| சர்ச்சை | இளையராஜாவின் காப்புரிமையை கேலி செய்த விவகாரம் |
| ரசிகர்கள் ரியாக்ஷன் | சமூக வலைதளங்களில் கண்டனம் |
| படக்குழு ரியாக்ஷன் | ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது |
| ஏற்பட்ட மாற்றம் | இளையராஜ தொடர்பான காட்சி படத்திலிருந்து நீக்கம் |
50 வருடங்களுக்கும் மேலாக, இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ சிறிதளவும் இல்லை என கருப்பு படக்குழு விளக்கமளித்து, வருத்தம் தெரிவித்ததையடுத்து இன்னொரு மூவ்-ஐயும் எடுத்துள்ளது. கருப்பு படத்தில் இளையராஜா தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
சூர்யாவிற்கு கடந்த13 வருடங்களில், நல்ல வெற்றியை கொடுத்த படமாக இருக்கிறது, கருப்பு. கடைசியாக வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ உள்ளிட்ட திரைப்படங்கள் கவிழ்த்துவிட்ட நிலையில், சூர்யாவிற்கு இந்த வெற்றி தேவைப்படும் ஒன்றாக இருந்தது. இப்படம், வெளியான 4 நாட்களில் சுமார் ரூ.147 கோடி வரை வசூலித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த வசூல் ரூ.60 கோடியை கடந்தது. படத்தின் ரிலீஸ் தேதியான 14ஆம் தேதி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்த நிதி பிரச்சனை காரணமாக, இப்படத்தை அன்றைய தினத்தில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து, ஆர்.ஜே.பாலாஜிக்கும் சரி, சூர்யாவிற்கும் சரி இந்த படம் இப்படி நல்ல வெற்றியை தந்துள்ளது பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்தடுத்து புதிதாக எந்த புதிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதாலும், இது சம்மர் லீவ் சமயம் என்பதாலும் கண்டிப்பாக இந்த படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்று தியேட்டரில் நன்றாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது. படம் தியேட்டரில் வெளியாகி 48 நாட்களுக்கு பிறகு, வழக்கமாக படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும். அப்படி, இந்த படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என கூறப்படுகிறது.