)
தவல் காடா தயாரிப்பில் ஜெயந்திலால் காடா வழங்கும் கும்கி 2 படத்தை பிரபு சாலமன் இயக்கி உள்ளார். அறிமுக நடிகர் மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, M.சுகுமார் ஒளிப்பதிவும், புவன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் கும்கி 2, முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான பாச போராட்டத்தை மீண்டும் ஒருமுறை திரையில் கொண்டு வர முயற்சித்துள்ளது. இந்த யானை பயணம், ரசிகர்களின் இதயங்களை வென்றதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைக்கிராமத்தில், சிறுவனாக இருக்கும் மதி (அறிமுக நடிகர்), பள்ளத்தில் தவறி விழும் ஒரு குட்டி யானையை காப்பாற்றுகிறான். அன்று முதல், அந்த யானையே அவனது உலகமாகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி, அந்த யானையை தனது சகோதரனை போல வளர்த்து வருகிறான். ஆனால், ஒரு கட்டத்தில், அவனது தாய் பணத்திற்காக அந்த யானையை விற்றுவிட, மதி நிலைகுலைந்து போகிறான். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தனது உயிருக்குயிரான யானையை தேடி அவன் மேற்கொள்ளும் பயணமும், யானைகளை வைத்து நடத்தப்படும் அரசியலும்தான் 'கும்கி 2' படத்தின் கதை.
அறிமுக நாயகன் மதி, தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். யானையின் மீது அவர் காட்டும் அன்பு, பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது. யானையை இழந்த தவிப்பு, கோபம் எனப் பல உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். வனத்துறை அதிகாரியாக வரும் அர்ஜுன் தாஸ், தனது மிரட்டலான நடிப்பால் தனித்து நிற்கிறார். அவருடன் வரும் ஆண்ட்ரூஸின் நகைச்சுவை, ஆங்காங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. ஆனால், நாயகி ஷிரிதா ராவ் சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்வது, ஒரு முழுமையான கதாநாயகி இல்லாத குறையை ஏற்படுத்துகிறது. மற்ற நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா, மலைகளின் அழகையும், இயற்கை காட்சிகளையும் தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது. யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான பாச பிணைப்பு, படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால், முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது, திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பது ஒரு சிறிய பலவீனம். குறிப்பாக, 'கும்கி' முதல் பாகத்தை மனதில் வைத்துக்கொண்டு திரையரங்கிற்கு வருபவர்களுக்கு, இந்தப் படம் ஒரு சிறிய ஏமாற்றத்தை அளிக்கலாம்.
'கும்கி 2' – ஒரு எளிமையான, யதார்த்தமான கதைக்களத்துடன், மனித-விலங்கு பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு நேர்த்தியான படைப்பு. யானைகள் மீது உங்களுக்கு ஒரு தனி பிரியம் இருந்தால், இந்த படம் உங்களை நிச்சயம் கவரும். இருப்பினும், முதல் பாகத்தின் தாக்கத்தை எதிர்பார்த்து சென்றால், சற்று ஏமாற்றமே மிஞ்சும். மொத்தத்தில், கும்கி 2 – முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஒருமுறை பார்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ