)
Nayanthara Hoax Bomb Threat News : சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட, இந்தியா முழுவதும் இருக்கும் முக்கிய நகரங்களின் முக்கிய பகுதிகளில், அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக, பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல், ஆண்டாண்டு காலமாக வந்து கொண்டிருக்கிறது. அவை, பல சமயங்களில் பொய்யானதாக இருக்கும், சில சமயங்களில் உண்மையானதாக இருக்கலாம். எது எப்படி இருப்பினும், அங்கு வெடிகுண்டு பரிசோதனை செய்பவர்களை அனுப்பி பரிசோதிப்பது காவல் அதிகாரிகளின் கடமை. அதை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, சமீப சில நாட்களாக சென்னையில் தங்கியிருக்கும் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
விஜய் வீட்டிற்கு..
நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த போது, 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து சென்னை திரும்பிய விஜய்யின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கு சில நாட்களிலேயே, விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது பொய் தகவல் என்பது தெரிந்தது. இருப்பினும், நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளானது தொடர்ந்து இருந்து வருகிறது.
த்ரிஷா வீட்டிற்கு..
நடிகை த்ரிஷாவின் வீடு, சென்னையில் உள்ள சேமியர்ஸ் சாலை அருகே உள்ளது. இங்கு அவர் தனது தாயுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வீட்டிற்கும் சில நாட்களுக்கு முன்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் பிறகு சோதனையில் இது பொய் என்று தெரிய வந்தது.
நயன்தாரா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்!
தனது இரு குழந்தைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்னை நுங்கம்பாகத்தில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறார், நயன்தாரா. இந்த வீட்டில் வெடிபொருள் வைத்திருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு காலையில் இ-மெயில் வந்துள்ளது. இதை அனுப்பியது யார் என்று தெரியவில்லை. இதையடுத்து, நயன்தாரா வீட்டில் சோதனை போட்டதில் இதுவும் பொய் என்று தெரிந்திருக்கிறது. நயன்தாராவிற்கு முன்பு, அலை பாயுதே, மொழி உள்ளிட்ட படங்களில் நடித்த சொர்ணமால்யாவின் வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்தது. அதுவும் சோதனையில் பொய் என்று தெரிந்தது. முதல்வர் வீட்டிலும் இதே கதை நடந்தது.
ஏன் இப்படி செய்கிறார்கள்?
ஒருவர் இப்படி பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிலர், பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், மீடியாவின் கவனம் தான் செய்த செயலின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் இப்படி செய்வர். சில விஷமிகள், தான் இந்த விஷயத்தை செய்தால் எவ்வளவு சீக்கிரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன என்பதை பார்ப்பதற்காக இப்படி செய்வார்கள்.
ஒரு சிலர், அந்த குறிப்பிட்ட பிரபலத்தை பிடிக்கவில்லை என்றால் இப்படி செய்வார்கள். இப்படி, பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்கின்றனர் மனோதத்துவ ஆலோசகர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ