கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான "லோகா: அத்தியாயம் 1 - சந்திரா" படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு தயாரிப்பாளர் துல்கர் சல்மான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திரையரங்குகளில் படம் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருவதால், ஓடிடி வெளியீட்டிற்கு அவசரம் காட்ட வேண்டாம் என்ற தயாரிப்பாளரின் முடிவை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | மாதம்பட்டி ரங்கராஜுக்கு செக் வைத்த ஜாய் கிரிஸில்டா.. வைரலாகும் புதிய போஸ்ட்

வசூலில் சாதனை படைத்த "லோகா"
ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான "லோகா" திரைப்படம், மலையாள திரையுலகில் ஒரு பெண் கதாநாயகியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு, அதிக வசூல் செய்த படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெறும் ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், உலகளவில் ரூ.290 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, தயாரிப்பாளர்களுக்கு சுமார் 10 மடங்கு லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம், அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, ஐந்தாவது வாரத்தை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 29 அன்று கூட, இந்த படம் ரூ.1 கோடி வசூலித்தது.
ஓடிடி வெளியீடு குறித்த வதந்தி
படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், அக்டோபர் 23-ம் தேதி "லோகா" ஓடிடியில் வெளியாகும் என சில ஊடகங்களில் செய்திகள் பரவின. இது, திரையரங்குகளில் படத்தை பார்க்க விரும்பிய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் துல்கர் சல்மான் தனது X பக்கத்தில், "லோகா இப்போதைக்கு ஓடிடிக்கு வரவில்லை. போலியான செய்திகளை புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருங்கள்!" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி, 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
ரசிகர்களின் வரவேற்பு
துல்கர் சல்மானின் இந்த முடிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். "நல்ல முடிவு," "அவசரம் வேண்டாம்," "திரையரங்கு அனுபவமே சிறந்தது" போன்ற கருத்துக்களை பதிவிட்டு, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓட வேண்டும் என்றும், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் விதத்தில் படம் உள்ளதாகவும் பலரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த படத்தை சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் வெளியிட வேண்டும் என ஒரு ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓடிடி உரிமம் மற்றும் அடுத்த பாகம்
"லோகா" திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் அல்லது ஜியோ ஹாட்ஸ்டார் கைப்பற்றியிருக்கலாம் என வதந்திகள் நிலவி வந்தாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே, "லோகா" படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டு, அதில் டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









