'கே ஜி எஃப் ', 'கோப்ரா' போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது நானியுடன் ஹிட் -தி தேர்ட் கேஸ் படத்தில் நடித்துள்ளார். மே 1ம் தேதி படம் வெளியாகிறது.

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ்' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் நானி பேசுகையில், ''நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன். பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என சொல்லி இருக்கிறேன். 2012 - 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு - தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹிட் படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன்.
'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' இது ஒரு படம் அல்ல. அற்புதமான அனுபவத்தை தரும் படைப்பு. முதல் இரண்டு படத்திற்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 'ஹிட் 1 ', 'ஹிட் 2 'படத்தில் இடம் பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் வரக்கூடும். ஆனால் படத்தின் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. ஏனைய இரண்டு பாகங்களை விட 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதற்காக மட்டுமல்ல.. இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில விசயங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள். கொண்டாடுவார்கள். ரசிப்பார்கள். அதிலும் தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும்.
'ஹிட் - தி தேர்ட் கேஸ் 'படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியிருக்கிறார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். இவர்கள் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிலும் மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை உங்களை நிச்சயமாக கவரும். இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம். இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விசயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்த படம் மாஸான கமர்சியல் என்டர்டெய்னர். ஆனால் அதே சமயத்தில் வழக்கமான கமர்ஷியல் படமாக இது இருக்காது. இந்தப் படம் வெளியான பிறகு நீங்களே உங்களுடைய நண்பர்களிடத்தில் படத்தைப் பற்றி சொல்லி, மீண்டும் திரையரங்கில் வந்து பார்ப்பீர்கள்.
இந்தத் திரைப்படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றிய தருணங்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிடும் சினிமாக்காரன் நிறுவனத்தின் வினோத் குமாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று 'ஹிட்' - 'ரெட்ரோ' என இரண்டு படங்களும் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். '' என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ