RRR: ரிலீசுக்கு முன்னாடியே இவ்ளோ பிசினஸா? ஷாக் மோடில் திரையுலகம்!
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வியாபாரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு இயக்குநரான இயக்குநர் ராஜமெளலி, பாகுபலி படங்களுக்குப் பிறகு பான்-இந்தியா இயக்குநர் எனச் சொல்லும் அளவுக்குப் பிரபலமடைந்துள்ளார். அவர் இயக்கிய பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி சுமார் 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவரது அடுத்த படமாக ஆர்.ஆர்.ஆர் எனும் படம் உருவாகியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன்,சமுத்திரகனி மற்றும் ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பலமுறை தள்ளிப்போனது. இறுதியாக வருகிற 25ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம்தான் தற்போது ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக இருந்துவருகிறது.
இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் இது ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில்,
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் வியாபாரம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வகையில், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகியவற்றின் தியேட்டர் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியிலும் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், தெலுங்கைவிட இந்தியில் அதிகத் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம். அதன்படி இந்தியில் 250 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல, தமிழக உரிமை ரூ. 75 கோடிக்கும் கர்நாடக உரிமை ரூ.80 கோடிக்கும், கேரள உரிமை ரூ.20 கோடிக்கும் வியாபாரம் நடந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், மொத்தமாக ரூ.800 கோடி வரையில் தியேட்டர் உரிமை வியாபாரம் நடந்துள்ளதாம். இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டு உரிமையாக மட்டும் ரூ.175 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாம்.
தியேட்டர்களைத் தாண்டி ஓ.டி.டி மற்றும் சாட்டிலைட் வியாபாரமும் மலைக்கவைக்கும் வகையில் நடந்துள்ளது. அந்த வகையில்,
ஆர்.ஆர்.ஆர் படத்தின் 5 மொழிகளுக்குமான ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை மட்டும் ரூ.300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவைபோக எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஆடியோ உரிமமாக ரூ. 25 கோடி கிடைத்துள்ளதாம்.
மேலும் படிக்க | ‘RRR’ க்கு இப்படியொரு அரசு சலுகையா?!
இப்படி ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 1125 கோடி வரையில் இப்படத்துக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. அதேநேரம், இவற்றில் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைத் தொகையான ரூ.300 கோடி, ஆடியோ உரிமையான ரூ.25 கோடி ஆகியவை மட்டும் தயாரிப்பாளருக்கு நேரடி லாபக் கணக்கில் போகும் எனக் கூறப்படுகிறது.
இதன் வாயிலாக, தனது படம் மட்டுமல்ல; தனது படத்தின் பிஸினஸும் பிரம்மாண்டம்தான் என நிரூபித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அவரின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாவதால் பாகுபலி படங்களைவிட ஆர்.ஆர்.ஆர் கூடுதல் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | உக்ரைனில் 'RRR' டீம்: ராஜமெளலி புதிய தகவல்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR