)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளியான விஜயின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். இன்று அதே தினத்தில் சிவகார்த்திகேயன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூட் ஜமால், பிஜு மேனன், சபீர், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
நாயகன் சிவகார்த்திகேயன் சிறுவயதிலேயே தன்னுடைய குடும்பத்தை இழந்ததால் ஒருவித மனநோயால் பாதிக்கப்படுகிறார். கதாநாயகி ருக்மணி வசந்தை பார்த்த பிறகு அவருக்கு அந்த நோய் சரியாகிறது. ஒரு கட்டத்தில் ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனை விட்டு பிரிகிறார். இதனால் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். அந்த சமயத்தில் NIA-விற்கு உதவும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அதன் மூலம் கள்ள துப்பாக்கிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் வில்லன் கும்பலை எப்படி அழிக்கிறார் என்பதே மதராஸி படத்தின் கதை.
சிவகார்த்திகேயனிற்கு ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் ரசிகர்கள் மனதில் பதிய மதராஸி ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. ஆக்சன் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலிருந்து எந்த ஒரு மேனரிசமும் இல்லாமல் முற்றிலும் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். கதாநாயகி ருக்மணி வசந்திக்கு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். ஆரம்பம் தொடங்கி இறுதி வரை டிராவல் செய்கிறார். அவரும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். வில்லனாக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வித்யூத் ஜமால் பல இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். அந்த அளவிற்கு அவரின் கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. NIA அதிகாரியாக பிஜு மேனனும், மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் சபீரும் சிறப்பாக நடித்துள்ளனர். விக்ராந்திற்கு சிறிய கதாபாத்திரமே என்றாலும் நன்றாக நடித்துள்ளார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஏ ஆர் முருகதாஸ் படம் வெளியாகி உள்ளது. அவருடைய பழைய பாணியில் இல்லை என்றாலும் நல்ல ஒரு படத்தை எடுத்துள்ளார் முருகதாஸ். பொதுவாக முருகதாஸ் படங்களில் ஒரு சமூக அக்கறை இருக்கும், அது இந்த படத்திலும் தொடர்கிறது. இடைவெளிக்கு முன்பு வரும் காட்சிகளும், கிளைமாக்ஸ் கட்சியும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் முழுக்க தங்களது இஷ்டத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதையை மாற்றி மாற்றி எழுதியுள்ளனர். இது படம் பார்க்கும்போது ஒரு வித சலிப்பை ஏற்படுத்துகிறது.
அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்த நிழலில் பின்னணி இசையும் தரமாக உள்ளது. பல சண்டைக் காட்சிகளை பின்னணி இசை தான் மெருகேற்றுகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு சில இடங்களில் நன்றாக இருந்தாலும், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மொத்தத்தில் இந்த மதராஸி நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ