Thalaivar 173 Latest News : ரஜினியின் ‘தலைவர் 173’ திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது இயக்குநரே மாறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Thalaivar 173 Latest News : கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
தலைவர் 173:
70களை கடந்த போதிலும், இன்னும் ஸ்கிரீனில் தோன்றினால் மக்களை ஆர்ப்பரிக்க செய்ய வைப்பவராக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். கடைசியாக இவர் நடித்த ‘கூலி’ திரைப்படம் வெளியானது. இதனை, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதிக ஹைப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், ரிலீஸிற்கு பின் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, அடுத்த படத்தில் சொதப்பாமல் நல்ல கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யோசித்த ரஜினிகாந்த், கதைக்கேட்கும் பணிகளை தாெடங்கினார்.
திடீரென ஒரு நாள் தலைவர் 173 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறியது. இதையடுத்து, இயக்குநர் யார் என்கிற அறிவிப்பும் வெளியானது.
சுந்தர்.சி:
தமிழ் திரையுலகில், முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி. இயக்குநராக மட்டும் இருந்த இவர், கடந்த 25 ஆண்டுகளில் நடிகராகவும் மாறிவிட்டார். இவர்தான், தலைவர் 173 திரைப்படத்தை இயக்கப்போவதாக வீடியோவுடன் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களிலேயே தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். இதிலிருந்து விலக சில தனிப்பட்ட காரணங்கள்தான் காரணம் என்றும், தனக்கு ரஜினி மற்றும் கமல்ஹாசன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, அடுத்த இயக்குநர் யார் என்கிற கேள்வி உருவானது. அப்போது இன்னொரு இயக்குநர் இந்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
சிபி சக்கரவர்த்தி:
முன்னர் எல்லாம், நடிகர் ரஜினிகாந்த் தன்னை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநர்களுடன்தான் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைப்பார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ திரைப்படத்தை இயக்கியிருந்த சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 திரைப்படத்தை இயக்குவராக அறிவிப்பு வெளியானது. டான் திரைப்படம் நல்ல வெற்றிபெற்றாலும், அதற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நிறைய விமர்சனங்கள் இருந்தது. அதே போல, இவரை ரஜினி நம்பியது எப்படி என்கிற கேள்வியும் இருந்தது. இதற்கு ஒரு மேடையில் பதிலளித்த சிபி சக்கரவர்த்தி, தலைவர் 173 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான போது எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து வாழ்த்துகள் வந்ததாகவும், ரஜினி ரசிகர்கள் படத்தை பார்த்து திருப்தியாகத்தான் செல்வார்கள் என்றும், அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறினார். இதையடுத்து, ரசிகர்கள் அனைவருக்கும் சிபி மீது நம்பிக்கை பிறந்தது.
ஜெயிலர் 2 திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருப்பதை அடுத்து ரஜினி இதில் நடித்து முடிக்க இருப்பதாகவும், ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தலைவர் 173 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ரஜினிக்காக சிபி சக்கரவர்த்தி 83 சிகை மற்றும் ஆடை அலங்கார நிபுணர்களை அழைத்து, படத்தில் அவரது தோற்றம் குறித்து பேசியதாகவும், அவரது லுக் படத்தில் எப்படியிருக்க வேண்டும் என்று விவரித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிபியும் விலகல்?
தலைவர் 173 திரைப்படத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று மேடையில் அப்படி பேசியவர், இப்போது இப்படி விலக காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் சிபி சக்கரவர்த்தி தனது ட்விட்டர் கணக்கில் ‘தலைவர் 173’ என்பதை இன்னும் சேர்த்துக்கொண்டுதான் வைத்திருக்கிறார். கூடவே, இந்த படத்தை இயக்கும் புது இயக்குநர் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
யார் அந்த இயக்குநர்?
சிபி சக்கரவர்த்திக்கு பதிலாக தலைவர் 173 படத்தை இயக்கப்போவது அஸ்வத் மாரிமுத்து என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய அவர், கடைசியாக ‘ட்ராகன்’ படத்தை இயக்கியிருந்தார். பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கும் அவர், அடுத்ததாக சிம்புவின் 51வது படத்தையும் இயக்குகிறார். இது ஃபேண்டஸி சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. இதில் சிம்பு, காதலின் கடவுளாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது தலைவர் 173 திரைப்படத்தை இவர் இயக்குவதக வெளியாகியிருக்கும் தகவல் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வத், சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நேர்காணலில், தான் ரஜினியிடம் கூறிய கதைப்பற்றி பேசியிருந்தார். அப்போது சிம்புவின் படத்துக்காக கதை எழுதிக்கொண்டிருக்கும் போது ரஜினியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும் முழு கதையை கேட்ட அவர், மதிய உணவு சாப்பிடுவதை மறந்து விட்டு கதை குறித்து விவாதித்ததாக்வும் கூறினார். பின்னர், இதி வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று அவர் கேட்டதாகவும், அப்படம் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், சில சூழ்நிலைகளால் கைகூடவில்லை என்றும் கூறினார். தற்போது அந்த கதையைத்தான் அஸ்வத் மாரிமுத்து ரஜினியை வைத்து எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ