விஜய்யின் ஜனநாயகன் படம் லீக் விவகாரம் குறித்தும் TN2026 படத்தில் விஜய் விமர்சிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து அப்படத்தின் நடிகர் நட்டி சுப்ரமணியம் பேசி உள்ளார்.

இயக்குநர் உமாபதி ராமய்யா இயக்கத்தில் நடிகர்கள் நட்டி சுப்ரமணியம், தம்பி ராமய்யா, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள TN2026 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படக்குழுவினரும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பார்வையாளர்களை சந்தித்து திரைப்படம் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடி வருகின்றனர். அந்த வகையில், கோவை வந்த படக்குழுவினர்களான இயக்குநர் உமாபதி ராமய்யா, நடிகர்கள் நட்டி சுப்ரமணியம், தம்பி ராமய்யா ஆகியோர் ப்ராட்வே திரையரங்கிற்கு சென்று பார்வையாளர்களிடம் கலந்துரையாடினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நடிகர் நட்டி சுப்ரமணியம், படத்தை அனைவரும் பாராட்டுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு குல்கந்த்குமார் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. பார்வையாளர்கள் விருப்பம் என்பது நிலையாக இருக்காது. அது மாறிக்கொண்டே தான் இருக்கும். இந்த படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். அதற்கு மூல காரணம் தம்பி ராம்மயா தான். இந்த படத்தில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. எந்த ஒரு தனி மனித தாக்குதலும் அல்ல. எந்த ஒரு கட்சியை சார்ந்தோ இல்லை. இது ஒரு அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பு தான். அதனை பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள். மேலும் விஜய் பற்றி எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களையும் நாங்கள் காட்டவில்லை. அமைதிப்படை படத்திற்கும் இந்த படத்திற்கும் சமூக வலைத்தளங்களில் கம்பேரிசன் முன் வைப்பது அது ஒரு பெரிய விஷயம். மிகவும் மகிழ்ச்சி என்றார்.
ஜனநாயகன் திரைப்படம் வலைத்தளத்தில் லீக் ஆனது தொடர்பான கேள்விக்கு, அது மிகப்பெரிய நஷ்டம் தான் அவ்வாறு செய்யக்கூடாது. அது போன்று இணையத்தில் ஏதேனும் படங்கள் வெளியானால் யாரும் அதனை ஆதரிக்க வேண்டாம். அதில் பல்வேறு மக்களின் உழைப்புகளும் பொருட்செலவும் உள்ளது. விஜய் இந்த படத்தை பார்க்க நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. தேர்தல் முடிந்ததும் பார்க்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய தம்பி ராமய்யா, இந்த படம் அரசியல் நய்யாண்டி படம். இந்த தகைமுறைக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்துள்ளது. அரசியல் சூழலில் 234 தொகுதிகளிலும் வெற்றி நடை போடுகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டது. மேலும் இது மக்களுக்கான படம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படம். ஜனநாயகன் படம் லீக் ஆனது தொடர்பாக பேசிய அவர், இளைய தளபதியின் சினிமா அந்த தளத்தில் லீக் ஆனால் கூட தற்பொழுது வரை பலரும் பார்க்கவில்லை. ஒரு நடிகர் அவரது ரசிகர்களை எவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதேபோல் ரசிகர்களும் அதனை பார்த்து விட்டால் தலைவர் வருத்தப்படுவார் தயாரிப்பாளர்களுக்கும் பல்வேறு நஷ்டம் ஏற்படும் என்று ரசிகர்களும் கட்சி இயக்கத்தை சார்ந்தவர்களும் பலரும் பார்க்காமல் இருப்பது தங்களைப் போன்றவர்களுக்கும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்று இருப்பதாக குறிப்பிட்டார். தங்கள் படம் 234 தொகுதிகளிலும் ஓடி வருகிறது எங்களுக்கு எதிர் கட்சியே இல்லை என்று தெரிவித்தார். எங்களின் TN2026 க்கு மக்கள் அனைவரும் வாக்களித்து வருவதாக கூறினார்.
இதையடுத்து இயக்குனர் உமாபதி ராமய்யா பேசினார். அப்போது, இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. எனவே மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பாருங்கள் என்றும் படத்தை பார்த்தவர்கள் உறவினர்களுக்கு இப்படம் குறித்து எடுத்துக் கூறுங்கள். சென்சார் போர்டு யாருக்கும் ஆதரவு அளிக்காது. அவர்களுக்கு என ஒரு வழிமுறை உள்ளது. தங்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை அவர்கள் வழங்கினார்கள். இந்த படத்தில் பணம் கொடுப்பது போன்ற எந்த ஒரு காட்சிகளும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தேர்தலுக்குப் பிறகுதான் வெளியிட முடியும் என்றார்கள். எனவே சென்சார் போர்டு ரூல்ஸ் படி பல்வேறு காட்சிகளை நீக்கினோம். அதனால் இந்தப் படம் வெளியிட அனுமதி கிடைத்தது என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ