)
இயக்குநர் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம் லால் சலாம். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், லிவிங்ஸ்டன், கே. எஸ். ரவிகுமார் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே கலவையாக விமர்சனங்களையே பெற்றது. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றாததால் ஓரளவான வசூலையே பெற்றது.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக கூறினார். இது அந்த சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக பொய் சொல்லக்கூடாது என ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்த நிலையில், லால் சலாம் படத்தின், புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் பதிப்பில், திரையில் வராத கதையுடன், இன்னும் ஆழமான உணர்வுகளுடன், லால் சலாம் திரைப்படம், இப்போது SunNXT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. நட்பு, துரோகம், இழப்பு மற்றும் புரிதலுக்கான போராட்டங்களைத் தழுவிய ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணம் தான் லால் சலாம். ஒரே கிரிக்கெட் அணியில் சிறுவயதில் விளையாடிய இரு நண்பர்கள், மதம், அரசியல் மற்றும் தவறான புரிதலால் பிரிந்துவிடுகின்றனர். அவர்களுக்குள் நிகழும் போராட்டம் தான் இந்தப்படத்தின் மையம். மதமும் அரசியலும் நட்பைப் பிரித்தாலும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டிராத புதிய பதிப்பு, ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக இப்போது ஒளிபரப்பாகிறது. இந்த புதிய பதிப்பில், நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அட்டகாசமான ஸ்வாக், கிரிக்கெட் பின்னணி, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தின் அட்டகாசமான நடிப்பு ஆகியவற்றுடன், திரையில் கண்டிராத பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
ரஜினிகாந்த் மற்றும் ரஹ்மான் எனும் மறக்க முடியாத கூட்டணி இப்படத்திலும் அசத்தியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு புது வடிவம் தந்துள்ளது. வெறும் திரைப்படமாக இல்லாமல், லால் சலாம் மனித உணர்வுகளுக்கு வலிமை கொடுக்கும் ஒரு அழகான பயணம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ