)
தனது தனித்துவமான உடல் மொழியாலும், இயல்பான நகைச்சுவையாலும் தமிழ் சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வந்தவர் பிரபல நடிகர் ரோபோ சங்கர். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்த இவர் உடல்நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார். சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். 46 வயதிலேயே அவர் இறந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பில் இருந்த போது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக படக்குழுவினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். பின்பு மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ரோபோ ஷங்கருக்கு புதன்கிழமை மாலை திடீரென உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பின்பு உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மஞ்சள்காமாலை நோய்யினால் பாதிப்பட்டு இருந்தார் ரோபோ ஷங்கர்.
ஒரு ஆணழகனாக தனது பயணத்தை தொடங்கி, விஜய் டிவியில் கலக்க போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மிமிக்ரி கலைஞராக பிரபலமானவர் ரோபோ சங்கர். தனது அபாரமான திறமையால், குறுகிய காலத்திலேயே சினிமாவில் நுழைந்து, மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விஸ்வாசம், புலி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். .குறிப்பாக மாரி படத்தில் அவரது காமெடி பலருக்கும் பிடித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் அவரது திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், மதுரை முத்து, டி. ராஜேந்தர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இரவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ரோபோ ஷங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ