8th Pay Commission Pensioners: ஜனவரி 2026 முதல் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் உயருமா? 8வது ஊதியக்குழு ஓய்வூதியதாரர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? முழு தகவலை இங்கே காணலாம்.
8th Pay Commission Latest News: அரசாங்கம் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை நிவாரணத்தை உயர்த்துகிறது. அகவிலை நிவாரண செயல்பாடுகள் அகவிலைப்படியுடன் ஒத்திருக்கின்றன. அகவிலை நிவாரணம் ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தைச் சமாளிக்க உதவும் வகையில், ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் அகவிலை நிவாரணத்தை (DR) வழங்குகிறது. ஓய்வூதியதாரர்களுக்கான இந்த அகவிலை நிவாரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியுடன் (DA) ஒத்துப்போகிறது. இது ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது.
தற்போது, அகவிலை நிவாரணம் 58% ஆக உள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 31, 2025 -இல் நிறைவடையும். அடுத்த அகவிலை நிவாரண உயர்வு ஜனவரி 2026-ல் வர வேண்டும். இந்த நிலையில், ஜனவரி முதல் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண உயர்வுக்கு என்ன நடக்கும்? அகவிலை நிவாரணம் பூஜ்ஜியமாகிவிடுமா? அதன் உயர்வு நின்றுவிடுமா? அல்லது தற்போதைய விதிகளின்படி அரசாங்கம் அதை உயர்த்துமா? இப்படி பல கேள்விகள் ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளன.
7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் தொடர்ந்து அதிகரிக்குமா? வரலாற்று ரீதியாக ஒரு ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் மத்திய அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஒரு ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பதைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் அதே வழியில் உயரும். எனவே, 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை இது ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும். கடந்த காலங்களில், ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டபோது, அகவிலைப்படியுடன் சேர்ந்து அகவிலை நிவாரணமும் அதிகரித்தது,” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை அரசாங்கம் எப்போது உயர்த்துகிறது? அரசாங்கம் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை நிவாரணத்தை உயர்த்துகிறது. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அரசாங்கம் அந்த இரண்டு மாதங்களில் உயர்வை அறிவிப்பதில்லை. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்புகள் பெரும்பாலும் மார்ச் மாதத்திலும், ஜூலை மாதத்திற்கான டிஏ டிஆர் உயர்வுகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் அறிவிக்கப்படுகின்றன.
அகவிலை நிவாரணம் ஒரு ஓய்வூதியதாரரின் ஓய்வூதியத்தை எவ்வாறு பாதிக்கிறது? அகவிலை நிவாரணம் ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ. 25,000 என்றும், தற்போதைய அகவிலை நிவாரண விகிதம் 58% என்றும் வைத்துக்கொள்வோம், அந்த ஓய்வூதியதாரரின் மொத்த ஓய்வூதியம் ரூ. 25,000 + (ரூ. 25,000-ல் 58%) = ரூ. 39,500 ஆக இருக்கும்.
ஜனவரி 2026 -இல் அரசாங்கம் அகவிலை நிவாரணத்தை 2% உயர்த்த முடிவு செய்து, அது 60% ஆக உயர்ந்தால்; அப்போது (அதே ஓய்வூதியதாரரின்) மொத்த ஓய்வூதியம் ரூ. 40,000 ஆக உயரும்.
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அகவிலை நிவாரணம் எத்தனை முறை அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு நவம்பர் 2025-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 4 முறை (ஜனவரி 2026, ஜூலை 2026, ஜனவரி 2027, ஜூலை 2027) உயரும்.
எத்தனை மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்? இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற மொத்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 69 லட்சம் ஆகும். இது 50.14 லட்சமாக உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
7வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் எவ்வளவு? குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 1,25,000 ஆகவும் உள்ளது. 7வது ஊதியக் குழுவில் ஓய்வூதியம் எவ்வாறு திருத்தப்பட்டது? 7வது ஊதியக் குழுவில், 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஓய்வூதியம் திருத்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் 6வது ஊதியக் குழுவில் இருந்த ரூ. 3,500-லிருந்து ரூ. 9,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் 6வது ஊதியக் குழுவில் இருந்த ரூ. 45,000-லிருந்து ரூ. 1,25,000 ஆகவும் உயர்ந்தது.
8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியம் எவ்வாறு உயரக்கூடும்? மத்திய அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் ஓய்வூதியத்தை அதிகரிக்க முடிவு செய்து, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.0 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ. 18,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 2,50,000 ஆகவும் உயரக்கூடும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.