Aadi Month 2025: 2025 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தின் முதல்நாள் வருகிற ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.
ஆடி மாதம் அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன.
ஆடி கிருத்திகை விரதம்: ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது என்றாலும், ஆடி மாத கிருத்திகை நட்சித்திரம் மற்றும் அன்று இருக்கும் கிருத்திகை விரதம் மிகச் சிறப்பான நாளாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை, ஞாயிற்றுக்கிழமை ஜூலை 22 ஆம் தேதி ஆடி மாதம் 4-ம் தேதி வருகிறது. முருகனுக்கு உகந்த தினமான அன்று, விரதமிருந்து முருகனை வழிபட வேண்டும்.
ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை என்பது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினமாகும். இது இந்துக்களால் மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலமும், பிதுர்களை வழிபடுவதன் மூலமும் அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை, வியாழக்கிழமை ஜூலை 24 ஆம் தேதி ஆடி மாதம் 8-ம் தேதி வருகிறது.
ஆடி பெருக்கு: ஆடி பெருக்கு அல்லது ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது ஆடி மாதத்தில் (ஜூலை நடுப்பகுதியில்) வரும் 18-ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு தமிழர் திருவிழா. இது நீர்நிலைகளான ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணறுகளில் நீரின் செழிப்பு மற்றும் விவசாயத்திற்கான நீர்வளத்தை கொண்டாடும் ஒரு விழாவாகும். இந்த ஆண்டு ஆடி பெருக்கு, ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடி மாதம் 18-ம் தேதி வருகிறது.
வரலட்சுமி விரதம் 2025: இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8ம் தேதி, ஆடி மாதத்தின் 23 ஆம் தேதி வருகிறது, ஆடி மாத மூன்றவது வெள்ளிக்கிழமையில் வருகிறது.
ஆவணி அவிட்டம்: ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பலருக்கும் இது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள். இந்தாண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது.
கோகுலாஷ்டமி 2025: கிருஷ்ண ஜெயந்தி விழா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் ஒரு சிறப்புக்குரிய நாளாகும். அதன்படி 2025 ஆம் ஆண்டு கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தின் 31ஆம் தேதி வருகிறது.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.