விசிக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல்... திருமாவளவன் மீது முக்கிய குற்றச்சாட்டு

Sun, 15 Dec 2024-7:18 pm,

இது குறித்து ஆதவ் அர்ஜூனா (Adhav Arjuna) வெளியிட்டிருக்கும் விலகல் கடிதத்தில், " விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். 

சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே  விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை  நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில்  'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். 

எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன். அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்... வாய்மையே வெல்லும்!.." என கூறியுள்ளார்.

அதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ச்சிக்காக தான் பேசிய கருத்துகளுக்காக இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுதந்திரமான கருத்துக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து என்னால் தெரிவிக்க முடியவில்லை என்பதை கூறியுள்ளார். மேலும், கட்சி தலைவர் திருமாவளவன் தனக்கு ஆதரவாக இல்லை என்பதையும் இந்த விலகல் கடித்தத்தில் மறைமுக அவர் கூறியுள்ளார். 

ஆதவ் அர்ஜூனா நீக்கம் பின்னணி : ஆதவ் அர்ஜூனா நிறுவனம் வாய்ஸ் ஆப் காமன் ஏற்பாடு செய்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. திமுக கொடுத்த அழுத்தத்தின் பேரில் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து ஆறு மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டார். 

 

அண்மையில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்த ஆதவ் அர்ஜூனா, திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது தொடர்ச்சியாக விமர்சித்தார். விசிகவில் இருக்கும் சிலர் திமுக அனுதாபிகள், அதிமுக அனுதாபிகள் என குற்றம்சாட்டிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உண்மையான கொள்கைக்கு ஏற்ப யாரும் செயல்படவில்லை என விமர்சித்தார். இந்த பேட்டிக்கு பதிலளித்த திருமாவளவன், ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக செயல்திட்டம் இருப்பதுபோல் தெரிகிறது என பகிரங்கமாக கூறினார். இந்த பேட்டிக்குப் பிறகு ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link