தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், அஜித்குமார் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கி உள்ளார்.
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளியாகின.
விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸ் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறு வயதில் இருந்தே ரேஸ் மீது அதீத பிரியம் கொண்ட அஜித்குமார் பைக் மற்றும் காரில் ரேஸ் செல்ல விருப்பப்படுவார்.
அந்த வகையில் அஜித்தின் கார் ரேஸ் டீம் துபாயில் நடந்த கார் ரேஸில் பங்கேற்றது. அதில் மூன்றாவது இடத்தையும் பிடித்து நாட்டிற்கு பெருமையும் சேர்த்தார்.
தொடர்ந்து கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போது, அஜித் விபத்தில் சிக்கினார். எனினும் அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. தடுப்புச்சுவரில் மோதி சுழன்றடித்து விபத்துக்குள்ளான வீடியோவும் வெளியானது.
இந்த நிலையில், பயிற்சியின் போது மீண்டும் நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கி உள்ளார். பெல்ஜியத்தில் நடந்து வரும் ஐரோப்பிய கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் டீமும் பங்கேற்று உள்ளது. இதில் பங்கேபதற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், வளைவில் திரும்பும்போது தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்து இருந்தாலும், அஜித்குமார் சிரித்தபடி நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கார் ரேஸ் பயிற்சியின்போது இதுபோன்ற விபத்துக்கள் சகஜம்தான் என்றாலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.