Anand Srinivasan on Gold: மக்களிடம் இருக்கும் தங்கத்தை அரசாங்க அமைப்பிற்குள் கொண்டு வர ஒரு புதிய திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஆனந்த் சீனிவாசன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1/6இது தொடர்பாக யூடியூப்பில் பேசிய ஆனந்த் சீனிவாசன், இந்திய உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ரூ. 140 வரை சரிவை கண்டுள்ள போதிலும், சர்வதேச சந்தையில் அது 4,164 டாலர்களை கடந்து, மிகவும் வலுவான நிலையில் நீடித்து வருகிறது. இதனால் தங்கம் தொடர்பான விவகாரங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. பொருளாதார ஆலோசனைக் குழுவினர் இது குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது ஒரு தனியார் பத்திரிக்கைநாளிதழிலும் இது பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
2/6அதாவது, இந்திய மக்களிடம் சுமார் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான 25,000 முதல் 30,000 டன் தங்கம் முடங்கியிருப்பதாகவும், அதனைப் பயன்படுத்தாமல் வீணாக வைத்திருப்பதாகவும் சந்தையில் விவாதங்கள் எழுந்துள்ளன. அதனை எவ்வாறு அரசு அமைப்பிற்குள் கொண்டு வரலாம் என்பது குறித்துப் புதிய திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கடந்த முறை வங்கிகள் மூலம் தங்கம் டெபாசிட் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்ட போது, வங்கிகளுக்கும் மக்களுக்குமிடையே போதிய பரஸ்பர நம்பிக்கை இல்லாததால் அது தோல்வியடைந்தது.
3/6எனவே, இந்த முறை மக்கள் தங்களின் தங்க நகைகளை நேரடியாக நகைக்கடை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வகையிலான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கு 0.25% முதல் 0.5% வரை வட்டி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் தங்களின் நகைகளைக் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். ஏனெனில், நகைகளை ஒப்படைத்தால் அவை உருக்கப்பட்டு வேறு வடிவமாக மாற்றப்படும் அபாயம் உள்ளது.
4/6ஆனால் தங்க நாணயங்களை ஒப்படைக்க வாய்ப்புகள் இருந்தாலும், அதற்குரிய வருமான ஆதாரங்கள் மற்றும் கணக்குகளை அரசாங்கம் கோரக்கூடும் என்ற அச்சத்தினால் யாரும் அவற்றை வெளியே கொண்டு வர மாட்டார்கள். எனவே, இந்த முயற்சியும் ஒரு பெரும் தோல்வியாகவே முடியும். உள்நாட்டுப் பண மதிப்பு பலவீனமடைந்து வரும் சூழலிலும், வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும் நிலையிலும், தங்களின் சொத்து பாதுகாப்பிற்காகவே மக்கள் தங்கத்தை வாங்கிச் சேமிக்கிறார்கள். அத்தகைய தங்கத்தை, பணத்தை அச்சிடும் நிர்வாகத்திடம் மக்கள் ஒப்படைக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். இதனால் இத்திட்டம் வெற்றியடைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது என்றார்.
5/6தொடர்ந்து பேசிய அவர், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன. உலக தங்கக் கவுன்சில் தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் பல்வேறு நாடுகள் இணைந்து 41 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளன. இதில் போலந்து 18 டன்களையும், சீனா 10 டன்களையும் வாங்கியுள்ளதோடு, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளும் தங்கத்தைச் சேமித்து வருகின்றன.
6/6உலக நாடுகள் டாலர்களை விற்றுவிட்டு தங்கத்தை வாங்குவதை வழக்கமாக்கி கொண்டுள்ளன. பிரபல பொருளாதார அறிஞர் நசீம் தலிப் குறிப்பிட்டதைப் போல, நாடுகள் தங்களின் அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்கு டாலரை பயன்படுத்தினாலும், தங்களின் சொத்து மதிப்பை நிரந்தரமாக பாதுகாத்து வைப்பதற்கான முதன்மை சேமிப்பாக தங்கத்தையே கருதுகின்றன. இத்தகைய சூழலில், மக்களின் பாதுகாப்பான சொத்து மதிப்பாக விளங்கும் தங்கத்தை அரசாங்கம் கேட்டால் மக்கள் தர முன்வர மாட்டார்கள்." என ஆனந்த் சீனிவாசன் விளக்கமாக கூறினார்.