Anbukkarangal scheme : அன்புகரங்கள் திட்டம் மூலம் மாதம் 2000 ரூபாய் பெறுவது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்
Anbukkarangal scheme : அன்புகரங்கள் திட்டம் மூலம் மாதம் 2000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
அன்புகரங்கள் திட்டம் (Anbukkarangal scheme) மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித் தொகை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.
மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து, பாதுகாத்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிவித்தார்.
இக்குழந்தைகள் பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையை தமிழ்நாடு அரசே வழங்கும்.
இது மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்துக்கு இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருக்கும் குழந்தைகளும் அன்புகரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தகுதியுடைய குழந்தைகள் குடும்ப அடையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல், குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் ஆவணங்களுடன், வசிக்கும் மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கவும்.
வாரந்தோறும் நடக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறைத்தீர்ப்பு முகாம்களிலும் இத்திட்டத்துக்கு மனு கொடுக்கலாம். அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் கிடைக்கும்.