Home Loan Prepayment: வீட்டுக் கடனை திட்டமிட்ட காலத்திற்கு முன்கூட்டியே திரும்பச் செலுத்த முடிவு செய்தால், இந்த 6 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
வீட்டுக் கடனை பெரும்பாலானோர் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்திவிடுவதாக திட்டமிட்டு வாங்கியிருப்பார்கள். அப்படியிருக்க, வட்டியின் சுமையை குறைக்க சிலர் முன்கூட்டியே கடன் தொகையை செலுத்த நினைப்பார்கள். அப்படி முடிவெடுக்கும்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
1/8வீட்டுக் கடன் என்பது நீண்ட கால நோக்கில் வாங்கப்படும் கடனாகவே இருக்கிறது. அப்படியிருக்க, சில பேர் வாங்கிய கடனை முன்கூட்டியே நிறைவு செய்ய நினைப்பார்கள். ஆனால், அப்படி செய்யும் முன் சில விஷயங்களையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். அவற்றை இங்கு பார்க்கலாம்.
2/8முதலீட்டின் வருமானம்: முன்கூட்டியே நீங்கள் செலுத்தும் கடன் தொகையுடன், முதலீட்டில் இருந்து வரும் வருமானத்துடன் ஒப்பிட வேண்டும். ஒருவேளை, நீங்கள் செலுத்தும் கடன் வட்டி தொகையை விட, முதலீட்டின் வருமானம் அதிகம் இருக்கும்பட்சத்தில், நீங்கள் உங்களிடம் உள்ள உபரி தொகையை முதலீடு செய்வதே நல்லது. வீட்டுக் கடன் என்பது எப்படியும் நீண்ட காலத்திற்குரியது. அப்படியிருக்க, அதே நீண்ட காலத்தில் நீங்கள் பங்குகளில் முதலீடு செய்தால் வருமானமும் அதிகம் கிடைக்கும், ரிஸ்கும் குறைவாக இருக்கும்.
3/8உபரி தொகை: முன்னர் சொன்ன முதலீட்டு ஐடியாவுக்கு, உபரி தொகை மிக அவசியம். அதாவது உங்களின் திருமணம், மருத்துவ ரீதியிலான அவசரம் போன்ற வீட்டுத் தேவைகளுக்கு பின் உங்களிடம் உபரியாக பணம் இருந்தால் மட்டும் கடனை விரைவாக முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் முடிவுக்கு வாருங்கள். ஒருவேளை உங்களின் சேமிப்புகளில் நீங்கள் கைவத்தால், அதன்பின் வீட்டுத் தேவைகளுக்கு வேறு இடத்தில் கடன் வாங்க நேரிடும். இது மேலும் சிக்கலுக்கு உள்ளாகும்.
4/8காலகட்டமும் முக்கியம்: உங்களின் கடன் காலகட்டத்தில், எந்த நேரத்தில் நீங்கள் Prepayment செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். காரணம், கடன் வாங்கிய ஆரம்ப கட்டத்தில், மாதத் தவணையில் வட்டி கூறு அதிகம் இருக்கும். எனவே அந்த நேரத்தில் நீங்கள் Prepayment செய்தீர்கள் என்றால் லட்சக்கணக்கில் வட்டியை குறைக்கலாம், மாதத் தவணையையும் குறைவாக செலுத்தலாம். ஆனால், கடன் காலகட்டத்தின் நடுப்பகுதி அல்லது மிகவும் பிந்தைய காலகட்டத்தில் Prepayment செய்தால் வட்டியை பெரியளவில் சேமிக்க முடியாது. எனவே, அந்த காலகட்டத்தில் உபரி தொகையை முதலீடு செய்வதே நல்லது.
5/8வரி விலக்கு இருக்கு மக்களே: வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அசல் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில் ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு கோர தகுதியுண்டு. வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கும் நீங்கள் வரி விலக்கு வாங்கலாம்.. வீட்டுக் கடன்களுக்கான வரிச் சலுகைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது, அனைவருக்கும் சொந்த வீடு என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருவதால் இதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால், இந்த வரிச் சலுகைகளை இழக்க நேரிடும். சிறிது தொகையை கூட நீங்கள் முன்கூட்டியே செலுத்தினாலும், வரிச் சலுகை குறையும்.
6/8அதிக வட்டியுள்ள கடன்களில் கவனம்: கிரெடிட் கார்ட் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை விட ஒப்பீட்டளவில் வீட்டுக் கடனில் வட்டி குறைவுதான். உங்களின் கடன் சுமையை குறைக்க வேண்டுமெனில் முதலில் அதிக வட்டியை கொண்ட அந்த கடன்களை நிறைவு செய்யவும்.
7/8கட்டண விவரங்கள்: பொதுவாக மாறக்கூடிய வட்டி விகித வீட்டுக் கடன்களில் Prepayment கட்டணங்கள் எதையும் வங்கிகள் வசூலிக்காது. ஆனால், நிலையான வட்டி விகித வீட்டுக் கடன்களில் Prepayment கட்டணங்கள் வசூலிக்கப்படும். எனவே, நீங்கள் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முடிவுசெய்தால், கடன் கொடுத்தவர்களிடம் முதலில் விசாரித்துக்கொள்ளவும்.
8/8(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஹெச்டிஎப்சி வங்கியின் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் மொழியாக்கம் ஆகும். இவற்றை பின்பற்றும் முன் உங்களின் நிதி சார்ந்த ஆலோசகரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். இவை உங்களை கடனை பெற வலியுறுத்தவோ, கடனை பெற ஊக்குவிக்கவோ எழுதப்பட்டது இல்லை, மக்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது)