Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) கோரி விண்ணப்பிக்கும்போது செய்யும் தவறுகளால் உங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதியதாக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள் உடனே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தான் விண்ணப்பிக்கின்றனர்.
ஆனால் விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? என்றால் இல்லை. உங்களின் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எனவே பலருக்கும் விண்ணப்ப பரிசீலனையின்போது தான் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.
அதற்கு காரணம் என்னவென்றால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களையும் மறந்து செய்யக்கூடிய சில தவறுகள் தான். அதனால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் சில விஷயங்களை கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. அதாவது ஒரே ரேஷன் கார்டில் இரண்டு பெண்கள் இருப்பின் அவர்கள் தனித்தனியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தால் அதில் ஒருவரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
அதேபோல் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசித்துக் கொண்டு தனித்தனி ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் சிக்கல் தான். அதிகாரிகளின் கள ஆய்வில் ஒரே வீட்டு முகவரியை வைத்து இரண்டு ரேஷன் கார்டு வாங்கியிருந்தால் ரேஷன் கார்டே ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகைக்கு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு வாங்கிய ரேஷன் கார்டை இழந்துவிடாதீர்கள். ஏனென்றால் ஒரே வீட்டு முகவரியில் இரண்டு ரேஷன் கார்டுகள் இருக்கவே கூடாது.
வீட்டில் முதியவர்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து அவர்கள் அரசின் வேறு ஏதேனும் ஓய்வூதிய திட்டத்தின் மாதாந்திர உதவித் தொகை பெற்றுக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
கார் உள்ளிட்ட சொந்த பயன்பாடுகளுக்காக கனரக வானங்கள் வைத்திருப்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இதனை கள ஆய்வின்போது அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள். விண்ணப்பிக்கும்போது வாகனங்கள் இல்லை என நீங்கள் கூறினாலும், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நிலங்கள் பொறுத்தவரை 10 ஏக்கருக்கும் மிகாமல் புன்செய் நிலங்களும், 5 ஏக்கருக்கும் மிகாமல் நன்செய் நிலங்களும் இருக்க வேண்டும். இந்த தகவலை நீங்கள் மறைத்து விண்ணப்பித்தால் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பதாரரின் நிலை கண்டறியப்பட்டு, உங்களின் விண்ணப்பம் நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் உண்மையிலேயே தகுதி வாய்ந்த பயனாளி என்றால் மட்டுமே விண்ணப்பிக்கவும். இல்லை என்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.