Ration Card : ரேஷன் கார்டு திருத்தம் செய்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு குறித்து இங்கே பார்க்கலாம்.
Ration Card : ரேஷன் கார்டு திருத்தம் செய்வதில் தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை கொண்டுவந்துள்ள கட்டுப்பாடு குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும், குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற முக்கியத் திட்டங்களுக்கும் அடிப்படையான ஆவணமாக இருக்கும் ரேஷன் கார்டுகளில் (Ration Card) திருத்தம் செய்வதற்கான நடைமுறையில் தமிழக அரசு அதிரடிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் முதல் அரசின் அனைத்து நலத்திட்டப் பயனாளிகளையும் தேர்ந்தெடுப்பதில் ரேஷன் கார்டுகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களின் விவரங்களுடன் வழங்கப்படும் இந்த அட்டை, நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், அரசுத் திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
முன்பு வரை, ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய ஆன்லைன், இ-சேவை மையங்கள் மற்றும் குறைதீர்ப்பு முகாம்கள் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடிந்தது. ஆனால், தற்போது இந்த முறையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உணவு வழங்கல் துறை, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், நகல் அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டு PDF பதிவிறக்கம், போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்க இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாட்டின்படி, ரேஷன் அட்டைதாரர்கள் கீழ்வரும் கால இடைவெளியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்: ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறை., ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறை. என திருத்தம் செய்யலாம்.
இந்தச் சேவைகளை முறைப்படுத்துவதற்காக மென்பொருளில் (Software) தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுத் திட்டங்களுக்கு ரேஷன் கார்டில் உள்ள தகவல்கள் சரியாக இருக்க வேண்டும் என்பதால், பொதுமக்கள் அடிக்கடி திருத்தம் கோரி விண்ணப்பிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையைக் குறைக்கவும், அரசின் நிர்வாகப் பணிகளை முறைப்படுத்தவும் துறை ரீதியாக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், இனிமேல் தங்களின் தேவைக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ளும் போது, இந்த ஆண்டுக்கு இருமுறை என்ற கட்டுப்பாட்டை மனதில் கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.