Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இது எப்போது அமலுக்கு வரும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Unified Pension Scheme: நிதிச் செயலாளர் டிவி சோமந்தன் தலைமையில் ஏப்ரல் 2023 இல் அமைக்கப்பட்ட ஒரு குழு, NPS-ஐ மறுசீரமைக்க பரிந்துரைகளை வழங்கியது. இது அரசு ஊழியர்களுக்கு அதிக நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக வழிவகுத்தது.
மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்தது. தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) என்ற விருப்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில், ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு உறுதியான ஊதியத்தைப் பெறுகிறார்கள். அதாவது அவர்களின் ஓய்வூதியம் NPS போல பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையின் செயல்திறனை சார்ந்திருக்காது. UPS ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 ஐ உறுதி செய்கிறது.
தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS என்பது சந்தை இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம். இதில் பணியாளரின் ஓய்வூதியம் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையின் செயல்திறனைப் பொறுத்து இருக்கும். இதனால் இதில் நிலையான மற்றும் உத்தரவாதமான ஓய்வூதியத்தை எதிர்பார்க்க முடியாது.
ஓருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமான UPS ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். NPS இன் கீழ் வரும் ஊழியர்கள் ஒரு முறை UPS ஐத் தேர்ந்தெடுத்தால், மீண்டும் NPS -க்கு மாற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. UPS இல் ஓய்வூதியத்தைக் கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. இந்த சூத்திரத்தின் மூலம், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தை கணக்கிட முடியும்.
ஊதியம் கணக்கிடும் சூத்திரம்: ஓய்வூதியம் = X இன் 50% (X = 12 மாத அடிப்படை ஊதியம்/12). பணியாளருக்கு 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை மீதமுள்ளிருந்தால் மட்டுமே இந்த சூத்திரத்தைப் பயன்படுத்த முடியும். 25 வருடங்களுக்கும் குறைவான சேவைக்காலம் இருந்தால், ஊதியம் அதற்கு விகிதாசாரமாக கணக்கிடப்படும். 25 வருட சேவைக்குப் பிறகு ஊழியர் தன்னார்வ ஓய்வு பெற்றால், ஓய்வூதியம் அசல் ஓய்வு தேதியிலிருந்து தொடங்கும்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு ஊழியருக்கு மூன்று வகையான சூழ்நிலைகள் ஏற்படலாம். முதல் சூழ்நிலையில், பணியாளரின் சேவைக்காலம் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் என்று வைத்துக்கொள்வோம். இந்த சூழ்நிலையில், பணியாளரின் பணி ஓய்வு நேரத்தில் சராசரி அடிப்படை ஊதியம் ரூ.12,00,000 என்று வைத்துக்கொள்வோம். சூத்திரத்தின்படி, இந்தத் தொகையை 12 ஆல் வகுக்க வேண்டும். இத மூலம் 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியம் ரூ.1,00,000 என வரும். இதில் 50 சதவீதம் அதாவது ரூ.50,000 பணியாளருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இரண்டாவது சூழ்நிலையில், பணியாளரின் சேவைக்காலம் 25 வருடங்களுக்கும் குறைவாக உள்ளது என வைத்துக்கொள்வோம். ஊழியர் 20 ஆண்டுகள் பணியாற்றுகிறார் என்று வைத்துக்கொண்டால், விகிதாசார காரணி 20/25 = 0.8 ஆக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஊதியக் கணக்கீடு - 50% X 1,00,000 X 0.8 = 40,000 ஆக இருக்கும்.
மூன்றாவது சூழ்நிலை குறைந்தபட்ச உத்தரவாத ஊதியம். ஒரு பணியாளரின் ஓய்வு நேரத்தில் அடிப்படை ஊதியம் ரூ. 15,000 ஆக இருந்தால், அவரது ஓய்வூதியம் ரூ. 7,500 ஆக இருக்கும். UPS -இல் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை ரூ.10,000 ஆகும். ஆகையால் அவருக்கு ஓய்வூதியமாக ரூ. 10,000 அளிக்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். 99% வழக்குகளில் ஊழியர்களுக்கு UPS அதிக லாபம் தரும், இருப்பினும் சில விதிவிலக்கான வழக்குகள் NPS இன் கீழ் இருக்கலாம் என அமைச்சரவை செயலாளர் டிவி சோமந்தன் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தற்போது NPS இன் கீழ் உள்ள, புதிய திட்டத்திற்கு மாற விரும்பும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.