நம் உடலின் ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக இருப்பது மூளை தான். உடலின் எடையில் இரண்டு சதவீதம் மட்டுமே உள்ள மூளை, நம் உடல் முழுவதையும் கட்டுப்படுத்துகிறது என்பது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம் தாம்.
மூளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடன் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் சாத்தியமாகும். இந்நிலையில் மூளை ஆரோக்கியத்திற்கும் நினைவாற்றலுக்கும் தேவையான சில ஊட்டச்சத்துக்களையும் உணவுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உடலின் நிகரில்லாத அற்புத அவயம் மூளை எனலாம். ஒரு சராசரி மனிதனின் மூளையின் எடை 1.4 கிலோ மட்டுமே. ஆனால் நம் உடலுக்குத் தேவையான கலோரிகளில், 30 சதவீத கலோரிகளை மூளை எடுத்துக் கொள்கிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்க அதிக கலோரி தேவை.
மூளை சிறப்பாக செயல்பட, மற்ற உறுப்புகளை விட ஆக்சிஜனும் அதிகம் தேவை. 24 மணி நேரமும் செயல்படும் மூளை, நாம் தூங்கும் போது கூட இயங்குகிறது. மூளை திறனும் நினைவாற்றலும் சிறப்பாக இருக்க, ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொழுப்பில் கரையும் வைட்டமின் ஈ மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட். இவை மூளை செல்களில் உள்ள கொழுப்புகள் ஆக்ஸிடேஷன் ஆகாமல் தடுக்கிறது. விதைகள், நட்ஸ் வகைகள், மீன் உணவுகள் ஆகியவற்றில் வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது
ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட வைட்டமின் சி, மூளைக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்தி, மூளையை காக்கிறது. சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய், கொய்யாப்பழம், முளைகட்டிய தானியங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
வைட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், முதுமை அடைந்த மூளையின் செல்களை புதுப்பித்து, புத்துணர்ச்சி அழிக்கிறது. கேரட், கீரை வகைகள், மஞ்சள் நிற பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
வைட்டமின் பி வகையைச் சேர்ந்த கோலின் சத்து, முதுமையால் ஏற்படும் ஞாபக மறதியை நீக்க உதவுகிறது. அவரைக்காய், பீன்ஸ், வேர்க்கடலை ஆப்பிள் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் காணப்படுகிறது.
ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த நட்ஸ் வகைகள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இவற்றில் பாதாம், வாதுமை பருப்பு, பூசணி விதைகள் ஆகியவை முதலிடம் வகிக்கின்றன.
மீன் உணவுகள் குறிப்பாக கடல் மீன்கள், ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்தவை. இவை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்தவை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.