Atal Pension Yojana News: பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தின் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இது குறித்து நிலவும் எதிர்பார்ப்புகள் என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Expectations: அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன? இதில் மாத ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கிறது? இதில் சேர்வதற்கான வயது வரம்பு என்ன? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
இன்னும் சில நாட்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அரசாங்க திட்டங்களிலும் பல வித மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மத்திய அரசின் மிகவும் பிரபலமான ஓய்வூதியத் திட்டத்திலும் ஒரு பெரிய அறிவிப்பு வரும் என நம்பப்படுகின்றது. பட்ஜெட்டில் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை அரசாங்கம் அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடல் ஓய்வூதிய திட்டத்தின் பல சந்தாதாரர்கள் பட்ஜெட்டில் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என நம்புகின்றனர்.
பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என சந்தாதாரர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க தற்போது எந்த எண்ணமும் இல்லை என்று அரசாங்கம் பலமுறை கூறியுள்ளது. இருப்பினும், இந்த செய்தி பட்ஜெட்டில் வரக்கூடும் என பல நிபுணர்களும் கணித்துள்ளனர்.
நேற்றுதான், அடல் ஓய்வூதியத் திட்டத்திற்கான கால அளவை அரசாங்கம் 2030-31 நிதியாண்டு வரை நீட்டித்தது. பட்ஜெட்டில் தொகையை அதிகரிப்பதாக அறிவித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு மற்றொரு நல்ல செய்தியை அளிக்குமா என்பது பட்ஜெட் தாக்கலின் போதுதான் தெரியும்.
அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மே 2015 இல் தொடங்கப்பட்டது. நாட்டில் ஒரு வலுவான மற்றும் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியமாக ₹1,000 முதல் ₹5,000 வரை பெறுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகை மற்றும் சந்தாதாரரின் வயதைப் பொறுத்து, மாதாந்திர பங்களிப்பு ₹42 முதல் ₹1,454 வரை வேறுபடும்.
முன்னதாக, அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அரசாங்கம் கூறியிருந்தது. ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது சந்தா தொகையையும் அதிகரிக்கும், இது சந்தாதாரர்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என அரசு தெரிவித்திருந்தது. எனவே, தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் திட்டத்தைத் தொடர முடிவு செய்யப்படுவதாகவும் அரசு தெரிவித்தது.
நவம்பர் 30, 2025 நிலவரப்படி மொத்தம் 84,517,419 பேர் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை தோராயமாக 8.4 கோடியாகும். இது திட்டத்தின் பரந்த அளவிலான அணுகலையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
₹1,000 ஓய்வூதியத் திட்டத்தில் அதிகபட்ச சந்தாதாரர்கள் (86.91 சதவீதம்) உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது எண்ணிக்கையில் 7.34 கோடியாகும். 3 சதவீத சந்தாதாரர்கள் ரூ.2,000 ஓய்வூதியத்திற்கும், ரூ.3,000 ஓய்வூதியத்தில் 1.41 சதவீதம் சந்தாதாரர்களும், ரூ.4,000க்கு 0.53 சதவீதம் சந்தாதாரர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.5,000 ஆகும். இதில் 8.15 சதவீதம், அதாவது தோராயமாக 68.7 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.
அடல் ஓய்வூதியத் திட்டம் ஏழைகள், பின்தங்கியவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக குறிப்பாகத் தொடங்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம் முதுமையில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதும், ஓய்வுக்குப் பிறகும் நிலையான மற்றும் நம்பகமான ஓய்வூதியத்தை உறுதி செய்வதுமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.