Heinrich Klassen IPL 2026: காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசெனை விடுவித்தால், ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த மூன்று அணிகள் நிச்சயம் அவரை குறிவைக்கும். அந்த 3 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
Sunrisers Hyderabad: ஹென்ரிச் கிளாசென் கடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் ரூ.23 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்ற அடுத்த ஆண்டே அவர் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
1/8ஐபிஎல் 2026 மினி ஏலம் (IPL 2026 Mini Auction) குறித்த பரபரப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. வீரர்கள் டிரேடிங் குறித்து தகவல்கள் தினமும் கசிந்தவண்ணம் இருந்தாலும், இதுவரை எந்த டிரேடிங்கும் உறுதிசெய்யப்படவில்லை.
2/8வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை (IPL 2026 Retention) ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் மினி ஏலம் மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3/8இந்தச் சூழலில், காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் (SRH) விளையாடி வரும் ஹென்ரிச் கிளாசென் ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு அணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் SRH அணி இவரை ரூ.23 கோடி கொடுத்து தக்கவைத்தது. இதுவரை நடந்த மெகா ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர் இவர்தான்.
4/8ஹென்ரிச் கிளாசென் இதுவரை ஐபிஎல் தொடரில் 45 இன்னிங்ஸில் 1480 ரன்களை அடித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிக்காக கடந்த 3 சீசனில் விளையாடியிருக்கும் இவர், தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனிலும் 400+ ரன்களை குவித்து வருகிறார். மிடில் ஆர்டரில் ஸ்பின்னரோ, வேகப்பந்துவீச்சாளரோ யாராக இருந்தாலும் கிளாசென் தனது அதிரடி ஆட்டத்தை கைவிடமாட்டார்.
5/82018ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகமாகி 122 சர்வதேச போட்டிகளில் விளையாடி, கடந்த ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 34 வயதான ஹென்ரிச் கிளாசென் (Heinrich Klaasen) லீக் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தும் நிலையில், தற்போது SRH அணியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஒருவேளை ஹென்ரிச் கிளாசெனை SRH விடுவித்தால், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த மூன்று அணிகள் நிச்சயம் குறிவைக்கும். அந்த அணிகளை இங்கு காணலாம்.
6/8குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans): சுப்மான் கில் தலைமையிலான இந்த அணியில் வெளிநாட்டு மிடில் ஆர்டர் வீரர் என பெரிதாக யாருமில்லை. ஜாஸ் பட்லர் நம்பர் 3இல் விளையாடுகிறார் என்றாலும் ஆட்டத்தை ஃபினிஷ் செய்யும் திறன்கொண்ட வெளிநாட்டு வீரர்கள் இருப்பதில்லை. பெரிதும் இந்திய ஃபினிஷர்களை நம்பி குஜராத் கடந்த சீசனில் களமிறங்கி, பிளே ஆப் வரை முன்னேறி 4வது இடத்தில் நிறைவுசெய்தது. எனவே, ஒரு சில பெரிய வீரர்களை விடுவிக்கும்பட்சத்தில், குஜராத் அணிக்கு அதிக பர்ஸ் தொகை கிடைக்கலாம். அதன்மூலம், கிளாசெனை ஏலம் கேட்க வாய்ப்பிருக்கிறது.
7/8கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders): கேகேஆர் அணிக்கு வெளிநாட்டு ஓப்பனர் மற்றும் விக்கெட் கீப்பர் தேவை. மிடில் ஆர்டரில் எக்கச்சக்க வீரர்கள் இருக்கின்றனர். ஆன்ட்ரே ரஸ்ஸலும் அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், கிளாசெனை எடுத்தால் விக்கெட் கீப்பிங் பிரச்னை போய்விடும். மிடில் ஆர்டரில் இவரை பொருத்துவது கடினம் என்றாலும், மினி ஏலத்தில் எடுத்துவிட்டால் அதற்கேற்ப பிளேயிங் லெவனை அமைத்துக்கொள்ளலாம். கிளாசென் வர வேண்டும் என்றால் வெங்கடேஷ் ஐயரை அந்த அணி நிச்சயம் விடுவிக்க வேண்டும்.
8/8சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings): ஹென்ரிச் கிளாசென் மற்ற அணிகளை விட சிஎஸ்கேவுக்குதான் மிக மிக தேவை எனலாம். தோனிக்கு அடுத்து மிடில் ஆர்டர் ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர் சிஎஸ்கேவுக்கு தேவை இருக்கிறது. எனவே, கிளாசெனை மினி ஏலத்தில் எடுக்க பெரும் தொகையை சிஎஸ்கே முதலீடு செய்ய தயாராகும். இதற்காக பல வெளிநாட்டு வீரர்களை விடுவிக்கவும் சிஎஸ்கே தயங்காது எனலாம். கான்வே, ரச்சின், சாம் கரன், ஓவர்டன் ஆகியோரை விடுவித்து வேறு சில சொற்ப தொகையில் சிக்கும் வெளிநாட்டு வீரர்களையும் சிஎஸ்கே குறிவைக்கலாம்.