Flight Ticket Cancellation: அடுத்த வரும் நாட்களில் நீங்கள் விமானத்தில் பயணிப்பவராக இருந்தால், சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
என்னதான் பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் இருந்து வந்தாலும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமானத்தில் தான் பயணிக்க வேண்டும். பேருந்து, ரயிலை காட்டிலும், பல மடங்கு விமானத்திலும் டிக்கெட் கட்டணம் இருக்கும். இருப்பினும், விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது விமான டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்களை செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முன்வந்துள்ளது. பல காலமாக விமான பயணிகள் வைத்த கோரிக்கையை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தற்போது நிவைவேற்ற உள்ளது.
DGCA-வின் புதிய அறிவிப்பின்படி, பயணிகள் இப்போது முன்பதிவு செய்த 48 மணிநேரம் வரை தங்கள் விமான டிக்கெட்டுகளை இலவசமாக ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியும். அதாவது, நீங்கள் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்து திடீரென உங்கள் திட்டங்களை மாற்றினால், அல்லது தவறான முன்பதிவு செய்தாலோ எந்த ஒரு அபராதம் இல்லாமல் 48 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை மாற்றவும், ரத்து செய்யவும் முடியும்.
இருப்பினும், உள்நாட்டு விமானங்களுக்கு புறப்படுவதற்கு ஐந்து நாட்கள் அல்லது சர்வதேச விமானங்களுக்கு புறப்படுவதற்கு 15 நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், இலவசமாக டிக்கெட்டை ரத்து செய்யும் முறை பொருந்தாது. இந்த சந்தர்ப்பங்களில், விமான நிறுவனத்தின் வழக்கமான ரத்து கட்டணங்கள் பொருந்தும் எனவும் DGCA தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும், விமான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவதை பொறுத்தவரை, விமான நிறுவனங்கள் 21 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப தர வேண்டும். முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பயணிகள் சிறிய தவறை சரிசெய்ய கூறினால், அதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என DGCA தெளிவுப்படுத்தியுள்ளது.
பயணி நோய் அல்லது அவசரநிலை காரணமாக விமானத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், அந்த சூழ்நிலையில் மட்டுமே விமான நிறுவனம் கடன் கூப்பன் அல்லது டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும். ஆனால் பயணிகளின் ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது. பயணிகள் பெரும்பாலும் பயண முகவர்கள் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இப்போது, DGCA திட்டத்தின்படி, அத்தகைய டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு முகவரை விட விமான நிறுவனம் நேரடியாகப் பொறுப்பாகும் என தெரிவித்தது. பயணிகள் இப்போது தங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது மாற்ற வேண்டியிருந்தாலோ, அவர்களின் பணமும் நேரமும் பாதுகாக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கலாம்