Tamil Nadu Government: தமிழ்நாட்டில் மின் கட்டணம் இந்தாண்டு 3 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு இன்று விரிவாக விளக்கம் அளித்துள்ளது.
Electricity Bill: தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, ஜூலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டன. அந்த வகையில், இந்தாண்டும் உயரலாம் என கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டு ஜூலையில் 2.18% கட்டணமும், 2024ஆம் ஆண்டு ஜூலையில் 4.8% கட்டணமும் உயர்த்தப்பட்டது.
அதே வகையில், இந்தாண்டும் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மின் கட்டண உயர்வு குறித்து இதுபோன்ற கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஊடகங்களில் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை நடைமுறைப்படுத்துகையில் வழங்கிடும்போது, அதனை வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என மொத்தம் 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.