ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு, இறுதி ஊர்வலம் எப்போது? காங்கிரஸ் அறிவிப்பு

Sat, 14 Dec 2024-1:54 pm,

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருமுறையும், ஒன்றிய அமைச்சராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றிய திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் (EVKS Elangovan) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (14.12.2024) காலை சுமார் 10.20 மணியளவில் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தமது இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து தனித்துவமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சியை மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவர் தலைவராக செயலாற்றிய போது, அன்றைய ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்து அரசியல் பேராண்மையோடு பணியாற்றி காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்த்தவர். 

தனது கருத்துகளை பொதுவெளியில் துணிச்சலாக கூறக் கூடியவர். தமிழக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல், தமிழக மக்களின் பேரன்போடு, அனைத்து அரசியல் கட்சியினரின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். 

தந்தை பெரியாரின் பேரன் என்பதோடு, தமிழக காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகன் என்ற பெருமை திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு உண்டு. இந்த பாரம்பரியத்தில் வந்த அவர், சமீபத்தில் ஈரோடு கிழக்கு, சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். 

 

தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களது இழப்பு என்பது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்ட உணர்வோடு மிகுந்த வேதனையில் இருக்கிறேன்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிற வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். 

திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டில் இன்று (14.12.2024) பிற்பகல் 2.00 மணி முதல் வைக்கப்படும். நாளை (15.12.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.00 மணியளவில் முகலிவாக்கம் எல் & டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link