Tamil Nadu Government: பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், ஆல்-கிளியர் செய்ய தற்போது தமிழ்நாடு அரசு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்திருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் (Polytechnic College Students) வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில், மாணவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் (MK Stalin) இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து நிலுவைப் பாடங்கள் (Arrears) வைத்துள்ள மாணவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் பருவ தேர்வுகளின் போது, தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது,"தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர்கல்வித் துறையில் பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை செம்மைப்படுத்தி வருகிறது.
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் தொழில் சார்ந்த கல்வியினை வழங்கி வருகிறது.
பாலிடெக்னிக் கல்லூரி பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு (Arrears) தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.
இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கனிவுடன் பரீசிலித்து உத்தரவிட்டதின் படி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக அரசு எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது, நிலுவைப் பாடங்கள் (Arrears) தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்க முடிவெடுத்துள்ளது" என்றார்.
இது குறித்த விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.