வீடு தேடி வரும் சலுகை.. தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி
அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி தெரிவித்திருக்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேரில் சென்று சமர்ப்பிக்கப்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படக்கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் வீட்டில் இருந்தே சமர்பிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி பணிபுரியம் ஊழியர், ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே சென்று, அவர்களின் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தியும், முக அடையாளம் வைத்தும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை (Jeevan Pramaan) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் அட்டை எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் இந்திய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வீட்டில் இருந்தே சமர்பிக்க சேவை கட்டணமாக ₹70 தபால்காரிடம் செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் தமிழக அரசு குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்து உள்ளனர் என இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தெரிவித்திருக்கிறது.
எனவே இனி ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிழை சமர்ப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.