UPI Services Outage: நாடு முழுவதும் ஜி பே, போன் பே, பேடிஎம் சேவைகள் முடங்கியிருப்பதால் பல்லாயிரக்கணக்கானோர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
UPI சேவைகளை பலரும் பயன்படுத்துவதால் கைகளில் ரொக்கத்தை வைத்திருக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. தற்போது UPI சேவைகள் முடங்கியதால் பலரும் ஏடிஎம்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
ஜி பே (Google Pay), போன் பே (Phone Pe), பேடிஎம் (Paytm) போன்ற UPI சேவைகள் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்பாடு நாடு முழுவதும் கிராமங்களின் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது.
இதனால், பால் கடை, பலசரக்கு கடை தொடங்கி அனைத்து இடங்களிலும் UPI சேவை இருக்கிறது. முன்பெல்லாம், நகரங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு பணத்தை வங்கியில் சென்று போட வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போதெல்லாம் ஒருநொடியில் பணத்தை அனுப்பிவிட முடிகிறது.
இப்படி UPI சேவைகளையே பலரும் அதிகம் சார்ந்திருக்கின்றனர். இதனால், வங்கியில் இருந்து பணத்தை கையில் எடுக்கும் பழக்கமே பலருக்கும் சுத்தமாக இல்லாமல் போய்விடுகிறது. ஒருவேளை மொபைலை மறந்துவிட்டு வெளியே வந்தாலோ, மொபைலில் பேட்டரி இல்லையென்றாலோ தான் ஏடிஎம் மெஷின்களை தேடி அலைகின்றனர்.
இந்த சூழலில், ஜி பே, போன் பே, பேடிஎம் ஆகிய UPI சேவைகள் இன்று நாடு முழுவதும் முடங்கியது. இதனால் பல தரப்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பாக, ஹெச்டிஎப்சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், UPI சேவையை பலராலும் பயன்படுத்த இயலவில்லை. அதாவது பணம் அனுப்பவும் முடியவில்லை, பணத்தை பெறவும் இயலவில்லை. இதனால், தனிநபர்கள் மட்டுமின்றி தொழில்களும் கடும் பாதிப்பை அடைந்துள்ளன.
இரவு 7.50 மணியளவில் UPI சேவைகளை பயன்படுத்த இயலவில்லை என மொத்தம் 2,750 புகார்கள் DownDetector தளத்தில் பதிவாகி உள்ளன. இது முடங்கியதற்கான காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இதில் கூகுள் பே பயனர்கள் 296 புகார்களையும், பேடீஎம் பயனர்கள் 119 புகார்களையும், எஸ்பிஐ வங்கியின் பயனர்கள் 376 புகார்களையும் அளித்துள்ளனர். ஆன்லைன் பேங்கிங் சேவையையுயம் பயன்படுத்த இயலவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இதுபோன்று UPI சேவைகள் பாதிக்கப்படுவது முதல்முறை என கூறப்படுகிறது. UPI சேவை பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் நிலை குறித்து பதிவிட்டு வருகின்றனர். பலரும் ஏடிஎம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.