Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு எப்படி கண்டுபிடிக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் யார்? என்பதை தமிழ்நாடு அரசு எப்படி கண்டுபிடிக்கும் என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூப்பாய் கொடுக்கும் அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை மக்களாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏனென்றால் தற்போது மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பகுதிவாரியாக நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இல்லாத பெண்கள், விண்ணப்பிக்காத பெண்கள் அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதில் தகுதியானவர்களை மட்டும் அடையாளம் கண்டு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாயம் ரூ.1000 கொடுக்கப்படும் என அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துவிட்டனர்.
அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கக்கூடாது, யாருக்கெல்லாம் விதிவிலக்கு இருக்கிறது என்பது தொடர்பான விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.
அந்த விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான புதிய பயனாளிகளை தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கும். தகுதியில்லாத பெண்கள் விண்ணப்பித்தால் பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அப்படி, என்னென்ன வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீது தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்யும் என்பதை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
முதலில் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு அவசியம். அதிலும் பொருளில்லாத அட்டை வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அந்த ரேஷன் அட்டை வைத்து விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது.
அந்த்யோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை மற்றும் முன்னுரிமையில்லாத ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு அதிகமாக நன்செய் நிலங்கள், 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்கள் விண்ணப்பிக்க கூடாது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பங்கள், இப்போது மத்திய, மாநில அரசு பணிகளில் இருப்பவர்களின் குடும்ப பெண்கள், வார்டு உறுப்பினர் தவிர மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவிகளில் இருப்பவர்கள், உதாரணமாக ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்களின் குடும்ப பெண்கள் விண்ணப்பிக்க முடியாது.
இதை தவிர்த்து தொழில் வரி, வருமான வரி கட்டுபவர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு மானியம் மூலம் நான்கு சக்கர வாகனம் வாங்கியவர்கள் தவிர்த்து சொந்த பயன்பாடுகளுக்காக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
இருப்பினும் இந்த தகவல்களை மறைத்து பெண்கள் யாரேனும் விண்ணப்பித்தால் அரசு ஒருசில வழிமுறைகள் மூலம் அந்த விண்ணப்பதார பெண்களின் தகுதிகளின் உண்மை தன்மையை கண்டுபிடித்துவிடும்.
அதாவது கிராம நிர்வாக அலுவலரின் கள ஆய்வு, ஆதார் கார்டு, செல்போன் எண், கணவரின் செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவை மூலம் ஒரு பெண் விண்ணப்பதாரரின் தகுதிகளை அரசு கண்டுபிடித்துவிடும். எனவே, உங்களின் தகுதிகளை அரசு கண்டுபிடிக்காது என அஜாக்கிரதையாக நினைத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.