Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான ஆவணனங்கள் என்ன தேவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் தமிழக அரசின் இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருக்கின்றனர்.
இன்னும் சில ஆயிரம் பெண்கள் தகுதியானவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்த திட்டத்தில் இன்னும் சேர்க்கப்படவில்லை. பல்வேறு காரணங்களுக்காக அவர்களின் பெயர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளது.
இருப்பினும் விடுப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய தகுதிகள் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியானால் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டதுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்யவேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்படும். அந்த காரணங்கள் தவறாக இருந்தால் உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்து இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
புதிய விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். வங்கி பாஸ்புக்கில் இருக்கும் மொபைல் எண்ணையே இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணாக கொடுக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பம் சரியாக இருந்தால் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கு முன்னதாக கலைஞர் உரிமைத்தொகை விதிமுறைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் இரண்டு தகுதிவாய்ந்த பெண்கள் இருந்தால் ஒருவருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதாவது ஒரே ரேஷன் கார்டில் இரண்டு பெயர்கள் இருந்தால் ஒருவர் மட்டுமே பயனாளியாக இருக்க முடியும்.
வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களாகவும், கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்களாகவும் இருக்கக்கூடாது. ஆண்டுக்கு 2.50 லட்சத்துக்கும் மேல் வருமானம் பெறுபவர்களாக இருக்கக்கூடாது. நன்செய் 5 ஏக்கர், புன்செய் 10 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட அடிப்படை விதிமுறைகள் இருக்கின்றன.
ஹெச்ஐவி, தொழுநோய், முதுகு தண்டுவட நோய், பார்கின்சன் நோய் உள்ளிட்ட வாழ்வை முடக்கும் நோய்களால் பாதிகப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அரசின் வேறு எந்த திட்டங்களில் உதவித் தொகை பெறுபவர்களாக இருந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலும் பயன்பெறலாம்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் வேறு திட்டங்களில் மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களைத் தவிர ஊராட்சிமன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.