Tirupati | திருப்பதி டிக்கெட் முன்பதிவு செய்யாமல் சென்றால் எந்தெந்த வழிகளில் சாமி தரிசனம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tirupati Ticket Booking | திருப்பதி செல்லும் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே ஏழுமலையானை சீக்கிரம் தரிசனம் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே மூன்று வழிகளில் வெங்கடாஜலபதியை சாமி தரிசனம் செய்ய முடியும். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடைபாதையாக சென்றால் அங்கு டோக்கன்கள் வழங்கப்படும். அங்கு ஆதார் எண்ணை காட்டி, முன்பதிவு செய்து, டோக்கன் பெற்று திருப்பதி வெங்கடாஜலபதியை சாமி தரிசனம் செய்யலாம். முதல் வழியாகும்.
அலிபெரி நடைபாதையாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள், அலிபெரி மெட்டில் கீழே உள்ள கவுண்டரில் டோக்கன் பெற்று, படி வழியாக மலையேறி செல்ல வேண்டும். 1200 வது படியில் இருக்கும் கவுண்ட்டரில் ஸ்கேன் செய்து விட்டு சென்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஸ்ரீவாரி மெட்டு வழியாக டோக்கன் பெற்று செல்பவர்கள், வீட்டில் எத்தனை பேர் சென்றாலும் அனைவரும் வரிசையில் நின்று ஆதார் எண் பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும். 13 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டோக்கன் பெற வேண்டிய கட்டாயம் கிடையாது.
இரண்டாவது வழி, அனைவருக்கும் தெரிந்த SSD டோக்கன் முறையாகும். கீழ் திருப்பதியில் ஸ்ரீநிவாசா காம்ப்ளக்ஸ், பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் ஆகிய மூன்று இடங்களில் காலை 2 மணி முதல் SSD டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 15,000 வரை SSD டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவில் திருப்பதி சென்றடைபவர்கள் SSD டோக்கன் வரிசையில் நின்றால், டோக்கன் பெற்று, பிறகு பஸ் அல்லது சொந்த வாகனங்களில் திருமலைக்கு சென்று அதே நாளில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். தரிசன டோக்கன் பெறும் இடத்திலேயே அறைகள் மற்றும் லாக்கர் வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
SSD டோக்கன் பெறுபவர்கள் நடைபாதையாக செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். மேலே சொன்ன இரண்டு வழிகளும் திருப்பதிக்கு அடிக்கடி செல்பவர்கள், திருப்பதி பற்றி தெரிந்தவர்களுக்கு தெரிந்த நடைமுறை தான். ஆனால் இவைகள் தவிர மூன்றாவதாக ஒரு வழியும் உண்டு.
திருப்பதியில் ஸ்ரீநிவாசதிவ்ய அனுகிரக ஹோமம் என்ற ஒரு ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமம் தினமும் அலிபெரியில் உள்ள கோவிலில் நடக்கிறது. காலையில் 7 மணிக்கு இந்த ஹோமத்தை காண பக்தர்களுக்கு டிக்கெட் கொடுக்க துவங்குவார்கள்.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் தினமும் காலை 5 மணிக்கு அலபெரியில் வரிசையில் நின்றால் 50 முதல் 100 டிக்கெட்கள் ஆஃப்லைனில் வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்ரீநிவாசதிவ்ய அனுகிரக ஹோமத்தில் கலந்த கொள்பவர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரை அலிபெரியில் நடக்கும் ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அங்கு என்ட்ரி போட்டு விட்டு, பகல் 3 மணிக்கு திருமலையில் உள்ள ஏடிசி சர்கிளுக்கு சென்று ரூ.600 செலுத்தினால் 2 பேர் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரே நாளில் ஏழுமலையானை தரிசன செய்து விட்டு வந்து விடலாம். இதற்கு ஆதார் கார்டு ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் இரண்டு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த வரிசையில் சென்றால் 2 அல்லது 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து திரும்பி விடலாம்.
இந்த 3 வழிகள் தவிர தினசரி சர்வ தரிசன முறையும் உள்ளது. இதில் செல்வதற்கு வரிசையில் நின்று, டிக்கெட் எதுவும் பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் சர்வ தரிசன வரிசையில் 8 முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் பார்க்க வேண்டும்.