ICC T20 World Cup 2026: இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்பதை இங்கு காணலாம்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதில் 20 அணிகள் மோத உள்ளன.
20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெறும். குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணியுடன் தலா 1 போட்டியில் மோதும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
சூப்பர் 8 சுற்றில், எட்டு அணிகள் இருப் பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணியுடன் தலா 1 போட்டியில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். அரையிறுதியில் வெல்லும் அணி டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் விளையாடும்.
இன்னும் ஐசிசி டி20ஐ தொடருக்கு முழுமையாக இரண்டு மாதங்களே இருக்கும் சூழலில், போட்டியின் அட்டவணையோ, போட்டி நடைபெறும் மைதானங்களோ இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அந்த வகையில், போட்டி நடைபெறும் மைதானங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஐந்து முக்கிய மைதானங்களையும், இலங்கையில் 2-3 மைதானங்களையும் ஐசிசி இறுதிசெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் அதன் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். இலங்கை அணியும் அதன் போட்டிகளில் சிலவற்றை சொந்த மண்ணில் விளையாடும்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டும் நடைபெறாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரின் சில போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது பின்னர் நவி மும்பைக்கு மாற்றப்பட்டது. இனி அங்கு ஐபிஎல் போட்டியும் நடைபெறாது என தகவல்கள் வெளியாகின்றன.
பாகிஸ்தான் அணியோ, இலங்கை அணியோ அரையிறுதிக்கு தகுதிபெறும்பட்சத்தில் ஒரு நாக்-அவுட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெறும். இல்லாவிட்டால் போட்டி இந்தியாவிலேயே நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்குதான் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தகுதிபெறும்பட்சத்தில் இறுதிப்போட்டி கொழும்புவில் நடைபெறும். இந்நிலையில், போட்டி நடக்கும் மைதானங்கள் மற்றும் போட்டியின் அட்டவணை இன்னும் சில நாள்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.