Kalaingar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைப்பு குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே காணலாம்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க கூடாது என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கவும், அவர்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க கூடாது என்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கியில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததில், ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் முதற்கட்டமாக திட்டத்தில் பயனாளர்களாக இணைக்கப்பட்டனர்.
இதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து மேல்முறையீடு செய்ததன் விளைவாக தொடர்ந்து பயனாளர்கள் இணைக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே புதிதாக ரேஷன் அட்டை பெற்று அவர்களில் பொருளாதாரத் தகுதிகளை நிறைவு செய்தவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணையக் காத்திருக்கின்றனர்.
அதேபோல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுடைய அத்தனை பெண்களும் இணைக்கப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி புதிய ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் விரைவில் வெளியாகும் வாய்ப்பை பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம் என்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.