NPS Retirement Gratuity: மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரா நீங்கள்? DoPPW பணிக்கொடை தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gratuity Rules for Central Government Employees: DoPPW வெளியிட்டுள்ள குறிப்பாணையில் பல்வேறு பணிகளுக்கு பணிக்கொடை மீதான வரம்பு எப்போது பொருந்தும், எப்போது பொருந்தாது என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பிறகான நிதி பாதுகாப்பில் கிராஜுவிட்டிக்கும் முக்கிய பங்கு உள்ளது. அது ஓய்வுக்குப் பிந்தைய பாதுகாப்புக்கான ஒரு உத்தரவாதமாக இருக்கின்றது.
சில அரசு ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பின்னரோ அல்லது பிற சந்தர்ப்பங்களிலோ பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அமைப்புகளில் பணியில் சேர்கிறார்கள். இப்படி இரண்டு வெவ்வேறு அரசு நிறுவனங்களில் பணிபுரிந்திருந்த ஊழியர்களுக்கு பணிக்கொடைக்கான விதி என்ன? இவர்களுக்கு இரண்டு முறை பணிக்கொடை கிடைக்குமா, அல்லது இரண்டாவது பணிக்காலத்திற்கான தொகையை அரசாங்கம் கழித்துவிடுமா?
இந்த குழப்பம் பல மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு இருந்தது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் ஊழியர்களுக்காக வெளியிடப்பட்ட இந்த புதிய உத்தரவு, ஊழியர்களின் பணிக்கொடைக்கு எப்போது உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும், எப்போது முழுப் பலனையும் பெற முடியும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அரசாங்கம் தனது இந்த அறிவிப்பிற்கு, "CCS (NPS-இன் கீழ் பணிக்கொடை செலுத்துதல்) திருத்த விதிகள், 2025"-இன் விதி 4A-ஐ அடிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது. எளிமையாகச் சொன்னால், இந்த விதி "இரட்டைப் பலனை" தடுக்கிறது. ஒரு அரசு ஊழியர் ஓய்வுபெற்று, ஏற்கனவே தனது பணிக்கொடையைப் பெற்றிருந்தால், மறுவேலைவாய்ப்பின் போது அந்த இரண்டாவது பணிக்காலத்திற்குத் தனியாகப் பணிக்கொடை வழங்கப்படாது என்று அந்தத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, அரசு கருவூலத்திலிருந்து ஒருமுறை ஓய்வூதியப் பணிக்கொடை பெற்ற பிறகு, அதே அமைப்பில் மறுவேலைவாய்ப்பு பெற்றால் ஊழியர்கள் மீண்டும் பணிக்கொடையைக் கோர முடியாது.
பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி, அதாவது அடானமஸ் அமைப்பிலிருந்து உரிய அனுமதி பெற்று மத்திய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த உத்தரவில் சற்று மாறுபட்ட விதிகள் உள்ளன. இத்தகைய ஊழியர்களுக்கு இந்தச் செய்தி ஓரளவு நிம்மதியை அளிக்கிறது, ஆனால் ஒரு நிபந்தனையுடன் இந்த நிம்மதி கிடைக்கிறது.
ஒரு ஊழியர் ஒரு பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வந்திருந்தால், அங்குள்ள அவரது பணிக்கொடையைத் தக்கவைத்துக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு. மேலும் மத்திய அரசு பணியில் அவரது சேவைக்கும் அவருக்கு பணிக்கொடை கிடைக்கும். இருப்பினும், அரசாங்கம் இங்கு ஒரு உச்சவரம்பை விதித்துள்ளது.
விதிகளின்படி, இரண்டு இடங்களிலிருந்தும் பெறப்படும் மொத்த பணிக்கொடைத் தொகையானது, ஒரு ஊழியர் தனது முழு சேவையையும் (பொதுத்துறை நிறுவனம் + மத்திய அரசு) மத்திய அரசு பணியில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது.
மாநில அரசு வேலையை விட்டுவிட்டு மத்திய அரசில் சேர்ந்தவர்களுக்கும் இதே சூத்திரம் பொருந்தும். ஒட்டுமொத்தமாக, பணம் இரண்டு இடங்களிலிருந்து வரும், ஆனால் மொத்த வரம்பு உங்கள் இறுதிச் சம்பளம் மற்றும் மொத்த சேவை காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
இந்த முழு விஷயத்திலும் மிகப்பெரிய நிம்மதி நமது முன்னாள் ராணுவ வீரர்களுக்குத்தான் கிடைக்கிறது. ராணுவ சேவைக்குப் பிறகு சிவில் சர்வீஸில் சேருபவர்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து அரசாங்கத்திற்குப் பல கேள்விகள் வந்தன. செலவினத் துறையுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த பணிக்கொடை வரம்பு விதி முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் பொருந்தாது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, ஒருவர் இராணுவத்தில் பணியாற்றி பணிக்கொடை பெற்றிருந்தால், அவர் குடிமைப் பணியில் சேரும்போது தனது முழுமையான குடிமைப் பணிப் பணிக்கொடையைப் பெறுவார். அவர் பெற்ற இராணுவப் பணிக்கொடையின் காரணமாக, அவரது குடிமைப் பணிப் பணிக்கொடையிலிருந்து ஒரு ரூபாய் கூட குறைக்கப்படாது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.