Republic Day Holidays 2026: குடியரசு தினத்தை ஒட்டி மொத்தம் மூன்று நாள்கள் விடுமுறை உள்ளது. இந்த விடுமுறையில் நீங்கள் சுற்றிப் பார்க்கத் தகுந்த 7 தென்னிந்திய சுற்றுலா தலங்களை இங்கு காணலாம்.
Tourist Places To Travel In Republic Day Holidays: வரும் ஜன. 26ஆம் தேதி (திங்கள்) குடியரசு தினமாகும். ஜன. 24, ஜன. 25 ஆகிய தேதிகள் வார இறுதி நாள்களாகும். எனவே இந்த மூன்று தினங்கள் நீங்கள் சுற்றுலா செல்ல இந்த 7 இடங்கள் நல்ல தேர்வாக இருக்கும்.
ஜாக் அருவி: கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள பெரும் அருவியாகும். ஷராவதி நதியின் நீர்வீழ்ச்சி இது. சுமார் 253 மீ., உயரத்தில் இருந்து இந்த அருவி விழுகிறது. இந்தியாவின் 2வது பெரிய அருவியாக கூறப்படுகிறது. இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்.
தேக்கடி: நாட்டின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் இது. இந்த சுற்றுலா தலம் கேரளாவில் அமைந்துள்ளது. தேக்கடியில் உள்ள பெரியார் தேசிய பூங்கா ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. ஆண்டின் 12 மாதங்களிலும் நீங்கள் இங்கு சுற்றுலா செல்லலாம். புதுமண தம்பதிகள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற இடமாகும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருக்கும் மூங்கில் படகு பயணம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இரவிலும் தேக்கடி அருமையான உணர்வை தரும்.
பந்திபூர்: கர்நாடகாவில் அமைந்துள்ள பந்திபூர் தேசிய பூங்காவும் புலிகள் சரணாலயமாக இருந்து வருகிறது. மேலும், இங்கு வனவிலங்குகள் எக்கச்சக்கமாக இருப்பதால் அதற்காவும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார். அக்டோபரில் இருந்து மே மாதம் வரை சுற்றுலா பயணிகள் சுற்றுலா வர ஏதுவாக இருக்கும். ஊட்டியில் இருந்து மைசூர் வழியில் இந்த இடத்தை அடையலாம். அதேநேரத்தில் விலங்குகளின் நடமாட்டத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணிவரை இங்கு போக்குவரத்திற்கு தடை உள்ளது.
பாப்பி கொண்டலு: ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமாகும். இந்த நீண்ட மலைத்தொடருக்கு குறுக்கே கோதாவரி ஆறு பாய்கிறது. இயற்கை அழகு நிறைந்த இந்த சுற்றுலா தலத்திற்கு அக்டோபரில் இருந்து மார்ச் வரை பயணிக்க ஏதுவான காலமாகும்.
டான்டெலி: உத்தர கர்நாடகாவில் அமைந்துள்ள டான்டெலி, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய நகரமாகும். இங்கு காளி ஆறு பாய்கிறது, இதில் படகு சவாரி சிறப்பாக இருக்கும். சாகச விரும்பிகள் இங்கு பல சாகசங்களை செய்ய வசதிகள் உள்ளன. இங்குள்ள வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயமும் பயணிகளை அதிகம் இருக்கிறது. அக்டோபரில் இருந்து மே மாதம் வரை இங்கு பயணிக்க ஏதுவான காலகட்டமாகும்.
பேக்கல்: கேரளாவின் மலபார் கடலோர பகுதியில் அமைந்துள்ள சிறு நகரமாகும். காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் கடற்கரைகள், பழங்கால கோட்டைகளால் நிரம்பி வழிகிறது. கேரளாவில் மிகப்பெரிய கோட்டைகள் இங்குதான் இருக்கின்றன. 45 குகைகள் அடங்கிய நித்யானந்தாஸ்ரம் குகைகள் உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்கள் இங்கு புகழ்பெற்றவை.
புதுச்சேரி: சென்னையில் இருந்து எளிமையாக பயணிக்கக் கூடிய சுற்றுலா தலம் புதுச்சேரி ஆகும். கடற்கரைகள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் இங்கு நிரம்பியிருக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. நீங்கள் சுற்றுலாவுக்கு திட்டமிடும்போது, அதற்கேற்ற வல்லுநர்களிடம் அல்லது உள்ளூர் மக்கள் யாரிடமாவது ஆலோசனை செய்யவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.