குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலே, 90 சதவிகித நோய்களை வராமல் தடுத்து விடலாம். உணவு நன்றாக ஜீரணித்து, ஊட்டச்சத்துக்கள் உடலில் சிறப்பாக கிரகிக்கப்படும் போது, நோய்நொடியேற்ற வாழ்க்கை வாழ்வது எளிதாகிறது.
உடல் பருமனை குறைப்பது முதல், இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வது, மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது என அனைத்திற்கும் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், அவை நிறைந்திருக்கும் சில உணவுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
குடலின் செயல் திறன் சிறப்பாக இருக்கும் போது, நோய் நொடி எதுவும் நம்மை அண்டாது. உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும். ஏனெனில், செரிமானம் சிறப்பாக இருந்தால், நாம் சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணிக்கப்பட்டு, அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலில் நன்றாக சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ப்ரோபயோடிக் உணவுகள் பெரிதும் உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. தயிர், தண்ணீர் ஊற்றப்பட்ட பழைய சாதம், இட்லி, தோசை ஆகியவை சிறந்த ப்ரோ பயோடிக் உணவுகள். இவை குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் குடலில் பெருக உதவுகின்றன.
செரிமானம் சிறப்பாக இருக்கத் தேவையான மற்றொரு ஊட்டச்சத்து, நார்ச்சத்து. காய்கறிகள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பட்டாணி, பீன்ஸ் வகைப் பருப்புகள், பாதாம் பருப்பு உள்ளிட்ட உலர் பழங்கள், விதைகள், ஓட்ஸ், பார்லி ஆகியவை உள்ளிட்ட பல உணவுகள் இதில் அடங்கும்.
செரிமானம் சிறப்பாக இருக்க மெக்னீசியம் சத்தும் போதுமான அளவு இருக்க வேண்டும். வாழைப்பழம், பாதாம் பருப்பு, கீரை வகைகள், அவகேடோ என்னும் வெண்ணை பழம் ஆகியவை மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களில் சில.
வைட்டமின் பி12 ஊட்டச்சத்தும், செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியம். காளான், ப்ரோக்கோலி, பால் பொருட்கள், சோயா உணவுகள், மீன் உணவுகள், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி12 அதிகம் காணப்படுகிறது
நியாசின் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி3 குறைபாடு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முழு தானியங்கள், கோழி இறைச்சி, கடல் உணவுகள், காளான்கள், உருளைக்கிழங்கு ஆகியவை வைட்டமின் பி3 நிறைந்துள்ள சில உணவுகள்.
செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இரும்பு சத்தும் அவசியம். கீரை வகைகள், பீட்ரூட், மாதுளம் பழம், கடல் உணவுகள் ஆகியவற்றில் இரும்பு சத்து நிறைந்துள்ளது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி அவசியம். அதேபோலவே குடல் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி அவசியமாகும். சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். உணவுகளில், கடல் உணவுகள், வகைகள், முட்டை ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் காணப்படுகிறது.
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க கால்சியம் சத்தும் தேவை. புரோக்கோலி, முட்டைக்கோஸ், எள்ளு விதைகள், பால் பொருட்கள் ஆகியவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.