Universal Pension Scheme: சமீபத்தில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. அரசு அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க தயாராகி வருகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Universal Pension Scheme: எந்த வித தொழில், வேலை அல்லது பணிகளுடனும் இணைக்கப்படாத, அனைவருக்குமான ஒரு ஓய்வூதியத் திட்டத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகின்றது. இந்த திட்டத்தில் ஓய்வூதியம் பெற எந்தவித பாகுபாடும் இருக்காது. தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், தனியார் துறை ஊழியர்கள் என யாராக இருந்தாலும், இதன் பயனாளியாகலாம்.
நாடு முழுவதும் ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது தற்போதைக்கு 'யுனிவர்சல் பென்ஷன் திட்டம்' அதாவது 'உலகளாவிய ஓய்வூதியத் திட்டம்' என்று அழைக்கப்படுகின்றது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, நாட்டு மக்கள் அனைவரும் ஓய்வூதிய வரம்பிற்கு வருவார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த திட்டத்தில் ஓய்வூதியம் பெற எந்தவித பாகுபாடும் இருக்காது. தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், தனியார் துறை ஊழியர்கள் என யாராக இருந்தாலும், இதன் பயனாளியாகலாம்.
அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களையும், தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களையும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகின்றது. அதாவது இதனால், குடிமக்கள் அனைவருக்கும் பலன் கிடைக்கும். வயதான காலத்தில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்க இந்தத் திட்டம் ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
இதன் ஆரம்பகட்ட ஆவணங்களை தயார் செய்யும் பணிகளில் தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வருகின்றது. இந்தப் புதிய திட்டத்தில், அரசாங்கம் ஏற்கனவே இருக்கும் பல்வேறு வகையான திட்டங்களை இணைத்து ஒரு உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான நம்பிக்கை கிடைக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின் படி, 2050 ஆம் ஆண்டுக்குள், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தை எட்டும் என கூறப்படுகின்றது. ஆகையால் இப்படிப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மிக அவசியமாகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இதுபோன்ற ஓய்வூதியத் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் அரசங்கம் எந்த வித பங்களிப்பையும் அளிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போதுள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய முறை போன்ற திட்டங்களில் அரசாங்கம் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு கிடைக்கின்றது.
இந்த திட்டம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொழில், வேலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினருக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட ஓய்வூதிய முறையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
தற்போதுள்ள சில முக்கிய ஓய்வூதியத் திட்டங்களை இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம் (PM-SYM) மற்றும் வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS-வர்த்தகர்கள்) போன்ற திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் இதில் சேரலாம். 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். இது பலதரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதுள்ள நிலவரப்படி, இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு பெரும்பாலும் வருங்கால வைப்பு நிதி முறையை சார்ந்துள்ளது. யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம், இந்த கவரேஜை விரிவுபடுத்துவதையும், அனைவருக்கும் நிலையான ஓய்வூதிய முறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.