DMK : திருச்சியில் தயாராகும் பெரியார் உலகத்துக்கு திமுக ரூ. 1.70 கோடி நிதியுதவி அளித்துள்ளது. அதிமுக என்ன செய்யப்போகிறது?
DMK : திருச்சியில் பிரம்மாண்டமாக தயாராகும் பெரியார் உலகத்துக்கு திமுக 1.70 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள நிலையில், அதிமுக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1/12தமிழ்நாட்டு அரசியலின் உயிர்நாடியாக இருக்கும் பெரியாரின் சிந்தனைகளை உலகமறிய செய்யும் வகையில் திருச்சியில் பிரம்மாண்டமாக ’பெரியார் உலகம்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2/12இதற்கு திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000 (ஒரு கோடியே எழுபது லட்சத்து இருபதாயிரம்) தொகையை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணியிடம் இன்று வழங்கினார்.
3/12அதிமுக, பெரியார் உலகத்துக்கு எவ்வளவு நிதியுதவி அளிக்கப்போகிறது என்பது இப்போது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் பெரியார் கொள்கை வழி நடக்கும் கட்சிகளாக முதன்மையாக அறியப்படும் கட்சிகளாக இருப்பவை திமுக, அதிமுக மட்டுமே.
4/12பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பதில் திமுக, அதிமுக இடையே ஒப்பீட்டளவில் மிகப்பெரிய வேறுபாடு இருந்தாலும், அதிமுக பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் கட்சி என்று இன்றும் பரவலாக நம்பப்படுகிறது. அப்படியான, அதிமுக தார்மீக அடிப்படையில் பெரியார் உலகத்துக்கு நிதியுதவி அளிக்க கடமைப்பட்டிருக்கிறது.
5/12பெரியாரின் சிந்தனைகளை உலகளவில் எடுத்துச் செல்ல மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கும் அதிமுகவும் விரைவாக நிதியுதவி அளிக்க வேண்டும். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதனை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6/12பெரியார் உலகம் - சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு - இம்மூன்றையும் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். அவருடைய சிந்தனைகளைப் போற்றவும், உலகுக்கு அவற்றை உரத்தக் குரலில் எடுத்துரைக்கவும் உருவாகிவரும் உன்னதத் தலமே பெரியார் உலகம்.
7/12தந்தை பெரியாரின் உயரிய சிந்தனைகளை அடையாளப்படுத்தும் வகையில் இதன் மய்யப் பகுதியில் 95 அடி உயரத்தில் பெரியாரின் பேருருவச் சிலை எழவிருக்கிறது. பார்வையாளர்களின் சிந்தனைக்கு விருந்தளித்து, அவர்களை ஈர்க்கும் வகையில் உலகில் வேறு எங்கும் காணமுடியாத தனித் தன்மையுடன் இது அமைக்கப்படுகிறது.
8/12இனிவரும் உலகின் புதிய தலைமுறையினரையும் பெரியார் உலகத்தின் கலை நுணுக்கம் கவர்ந்திழுக்கும். பண்பாட்டுச் சிறப்புகளும், கட்டிட எழிலும், சமூகச் செயல்பாடு களும் சங்கமிக்கும் இடமாக ‘பெரியார் உலகம்’ இருக்கும். சமத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கப் போகும் பெரியார் உலகம்
9/12சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூரில் அமைந்துள்ள 27 ஏக்கர் நிலப்பரப்பில், உருவாகி வருகிறது பெரியார் உலகம். இதன் முக்கியச் சிறப்பு, பெரியாரின் 95 அடி உயரச் சிலை. சிலையைத் தாங்கி நிற்கும் பீடமே 60 அடி உயரமாக இருக்கும். இரண்டையும் சேர்த்து தரையிலிருந்து மொத்த உயரம் 155 அடியாக இருக்கும்.
10/12பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இந்த ஒரே இடத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவருடைய முற்போக்குச் சிந்தனையை அறிவியல் பார்வையில் பிரதிபலிக்கும் வகையில் அமையும். சமத்துவம், மனிதநேயம் போன்ற உயர்ந்த கொள்கைகளுக்காகப் பெரியார் எப்படிப் பாடுபட்டார் என்பது தெரியவரும்.
11/12நன்கு திட்டமிட்டு அமைக்கப்படும் இந்தப் பெரியார் உலகத்தில், கலைநயம் மிக்க நூலகம் ஒன்று அறிவுக் கருவூலமாக உருவாகி வருகிறது. அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை நெறியையும், தனித்துவத்தையும் பறைசாற்றும் நோக்கத்துடன் கலை நிகழ்ச்சிகளுக்காகவும், சமூக நிகழ்வுகளுக்காகவும் ஓர் அழகிய கலையரங்கமும் உருவாகி வருகிறது.
12/12பார்வையாளர்கள் மீது வியக்கத்தகு தாக்கத்தை பெரியார் உலகம் ஏற்படுத்தப்போவது உறுதி. ‘பெரியார் உலகம்’ நிறைவடைய உங்களது நன்கொடைகள் பெரிதும் உதவும். சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கவல்ல இந்த புதிய, அரிய முயற்சிக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை விரும்புபவர்கள் https://periyarworld.org/tamil/ என்ற இணைய பக்கத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பலாம்.