பிக் பாஸ்-9 நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம்: சென்னையில் பரபரப்பு! 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சிக்கு எதிராக, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை அருகே குத்தம்பாக்கத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
"பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்", "தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்" போன்ற முழக்கங்களை எழுப்பி, அக்கட்சியின் மகளிர் அணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி, இளம் தலைமுறையினரின் மனநிலையை பாதிப்பதாகவும், குடும்ப பண்பாடுகளை சீர்குலைப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் முன்னரே அறிக்கை வெளியிட்டிருந்தார். நிகழ்ச்சியைத் தடை செய்யாவிட்டால், மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைந்துள்ள வேல்ஸ் கார்டன் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பிக் பாஸ் படப்பிடிப்பு அரங்கம் அமைந்துள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி இரண்டாவது ஆண்டாக தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் சீசன் 9, கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன்னர் முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.