Ration card : புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எதில் விண்ணப்பித்தால் சீக்கிரம் கிடைக்கும் என பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு (Ration card) இருக்கிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டின் வகையைப் பொறுத்து கூடுதல் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை பெற முடியும்.
அதாவது, இலவச அரிசி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரை ரேஷன் கார்டு அடிப்படையிலேயே பயனாளர்கள் பிரதானமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏழை, எளிய மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற அந்தஸ்தில் இருப்பதால் அவர்களுக்கு அரசின் சலுகைகள் பிரதானமாக கிடைத்துவிடும்.
அதனால் புதிய ரேஷன் கார்டு வேண்டும் என விண்ணப்பிப்பவர்கள் பலரும் அரிசி ரேஷன் கார்டுகளையே தேர்வு செய்து விண்ணப்பிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, புதிய ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், எப்படி விண்ணப்பித்தால் சீக்கிரம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை உங்கள் வீட்டில் இருந்தே மொபைல் அல்லது லேப்டாப், கம்பயூட்டர்கள் மூலம் விண்ணப்பிக்க முடியும். ஆதார் கார்டு, கேஸ் சிலிண்டர் புக் முகப்பு அட்டை, வீட்டு வரி ரசீது, மின்சார பில், வாடகை வீடு என்றால் வாடகை வீட்டு ரசீது, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றின் ஸ்கேன் காபி இருக்க வேண்டும்.
இவற்றை வைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதே ஆவணங்களின் நகல்களை புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன் இணைந்து நேரடியாக தாலுகா ஆபீஸூக்கு சென்று ஆப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், ஆன்லைன், ஆப்லைன் என எந்த வழிகளில் விண்ணப்பித்தால் ரேஷன் கார்டு சீக்கிரம் கிடைக்கும் என்றால் ஆப்லைன் என்பதையே பலரும் தேர்வு செய்கின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கும் என்று அரசு கூறினாலும் நடைமுறையில் ஆப்லைன் விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே ரேஷன் கார்டு பெற்று விடுகின்றனர்.
புதிய ரேஷன் கார்டுக்கு ஒருவர் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார் என்றால், அவருக்குப் பிறகு ஆப்லைனில் விண்ணப்பித்தவர்கள் புதிய ரேஷன் கார்டு பெற்ற சம்பவங்களும் அண்மைகாலத்தில் பார்க்க முடிகிறது.
குறைந்தபட்சம் ஆன்லைன் விண்ணப்பங்கள் சீக்கிரம் பரிசீலனைக்கு எடுத்தால்கூட விண்ணப்பதாரர்கள் ஓரளவு திருப்தி அடைவார்கள். பரிசீலனையில் விண்ணப்பம் ஏற்பு, நிராகரிப்பு என இரண்டில் ஒரு விடை கிடைத்தால் மீண்டும் தவறுகளை களைந்து புதிய விண்ணப்பம் செய்வார்கள். ஆனால், அதனைக் கூட புதிய ரேஷன் கார்டு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு அதிகாரிகள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
ஏழு, எட்டு மாதங்களாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஆன்லைனில் அப்படியே கிடப்பில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளைப் பொறுத்து ஒரு சில ஏரியாக்களில் சீக்கிரம் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் சீக்கிரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில இடங்களில் கிணற்றில் போட்ட கல் போல எந்த சமிக்கைகளும் இல்லாமல் இருக்கின்றன.
அதனால், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துக்கு ஆன்லைனைக் காட்டிலும் ஆப்லைன் முறையே அதிகம் மக்கள் நாடத் தொடங்குகின்றனர். முன்பு இருப்பவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் இந்த முறையை மக்கள் தேர்வு செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.