World Test Championship: சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
தனது நாட்டை விட்டுவிட்டு ஐபிஎல் தான் முக்கியம் என்று சென்றதால் தான் ஜோஷ் ஹேசில்வுட்டால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மே 27ம் தேதி முடிய வேண்டிய இறுதிப்போட்டி ஜூன் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
ஜூன் 10ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்க இருந்த நிலையில் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல்லில் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடினார். அவரால் தான் ஆர்சிபி அணி கோப்பையும் வென்றது.
அதன் பிறகு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை. மேலும் விக்கெட்டுகளை எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டார்.
தற்போது ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பல முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியா அணி வீரர்களை சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் ஆஸ்திரேலியா அணி வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டை விட்டு விட்டு பணத்திற்காக சென்றால் இந்த நிலை தான் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.