உடல் எடையை குறைக்க உதவும் சுவையான பன்னீர் முட்டை ஆம்லெட் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கும், டயட்டில் இருப்பவர்களுக்கும் பன்னீர் முட்டை ஆம்லெட் உதவுகிறது. புரதச்சத்து நிறைந்த இதனை காலை உணவாக உட்கொள்ளும் போது, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் வழங்குகிறது.
இந்த சிறப்பு ஆம்லெட் செய்ய 100 கிராம் பன்னீர், 3 முட்டைகள், துருவிய கேரட் - 1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், 3 ஸ்பூன் சமையல் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை தேவைப்படும்.
மிக்ஸி ஜாரில் பன்னீர் துண்டுகளை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு தூவி நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே 3 முட்டைகளையும் உடைத்து ஊற்றி, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிகவும் மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்துவதக்க வேண்டும். அதன்பின் துருவிய கேரட், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, அடுப்பை அணைத்து இந்த கலவையை சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
காய்கறி கலவை நன்கு ஆறிய பிறகு, அதனை ஏற்கனவே மிக்ஸியில் அரைத்து தயாராக வைத்துள்ள பன்னீர் - முட்டைக் கலவையுடன் கொட்டி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், அதில் சிறிதளவு எண்ணெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஒரு கரண்டி எடுத்து தோசைக்கல்லில் பரவலாக ஊற்ற வேண்டும். இருபுறமும் நன்கு சிவக்க வேகவைத்து எடுத்தால், ஆரோக்கியமான வெயிட் லாஸ் பன்னீர் ஆம்லெட் தயார்.